திருப்பூர் மன்னரை அருகே உள்ள பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (70). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளது. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மணியம்மாவிடம் அதிகமாகப் பணம் இருப்பதை அறிந்து கொண்ட செந்தில்குமார் அதனைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த போதிராஜன், சதீஷ் ஆகிய 2 பேரை கூட்டாளிகளாகச் சேர்த்துள்ளார்.
இதனையடுத்து நேற்று நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் மது போதையில் மணியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த சார்ஜர் ஒயரை வைத்து மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் நகை, பணத்தைத் தேடியுள்ளனர். ஆனால் பீரோவில் மூன்று கிராம் நகை செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் மட்டுமே இருந்ததுள்ளது. பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை வெளி பக்கமாகப் பூட்டி சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீடு நீண்ட நேரமாகப் பூட்டியிருப்பதைப் பார்த்துச் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் வீட்டில் குடியிருந்த செந்தில் குமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணை வைத்து செந்தில்குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீசார் விசாரித்தனர். அப்பொழுது பணத்துக்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்தில்குமார், போதிராஜன், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பணத்திற்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.