தமிழ்நாடு

கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை

கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை

Sinekadhara

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர். ஆறுகுட்டியை தொடர்ந்து அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவரைத் தொடர்ந்து அதிமுகவின் வர்த்தக அணி பொறுப்பாளரும் கோடநாடு பங்களாவில் மர வேலைகளை செய்தவருமான சஜீவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் அவரது சகோதரர் சிபியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டு நாட்களாக கோவையில் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் என்பதால் கோடநாடு பங்களாவில் உள்ள ஆவணங்கள் எங்கு உள்ளது என யாரேனும் இவரிடம் தொடர்பு கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. (காலை 10.45 to 8pm) போயஸ் கார்டன் சிறுதாவூர் பங்களா மற்றும் கோடநாடு பங்களா தொடர்பான பல்வேறு தகவல்கள் சசிகலாவுக்கு அடுத்தபடியாக பூங்குன்றன் மட்டுமே தெரியும் என்பதால் அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொலைச் சம்பவத்தின்போது இவரை யாரேனும் தொடர்புகொண்டனரா அல்லது கோடநாடு பங்களா குறித்த தகவல்களை அவர் யாரிடமாவது பகிர்ந்துள்ளாரா என்ற பல்வேறு கோணங்களில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியான நிலையில் விசாரணைக்கு பின் அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேச மறுத்து தனது காரில் விரைந்து விட்டார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்து வரும் சூழலில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது.