தமிழ்நாடு

இரண்டு சிறுத்தைகளுக்கு ஏற்பட்ட மோதலில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழப்பு

இரண்டு சிறுத்தைகளுக்கு ஏற்பட்ட மோதலில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழப்பு

webteam

கோவை வனப்பகுதியில் 2 வயது ஆண் சிறுத்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில் 2 சிறுத்தைகள் மோதிக்கொண்டதால் இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடிவார கிராமங்களான வீரபாண்டி, மாங்கரை, பெரியதடாகம், சின்னதடாகம், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும். இத்தகைய விலங்குகள் வராமல் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் அடிவாரத்தையொட்டிய மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த சிறுத்தையை பார்த்த வனத்துறையினர், அதன் உடலை கைப்பற்றி அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு உடற்கூறு ஆய்வு செய்து அதே இடத்தில் எரித்தனர்.

அப்போது, இரண்டு சிறுத்தைகள் சண்டையிட்டு அதில் ஒரு சிறுத்தை இறந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுத்தைக்கு 2 வயது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.