தமிழ்நாடு

தண்ணீர் தேக்கி வைக்க தோண்டப்பட்ட குட்டை: 2 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

தண்ணீர் தேக்கி வைக்க தோண்டப்பட்ட குட்டை: 2 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

திருமயம் அருகே தோட்ட வளர்ப்புக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த குட்டையில் விழுந்து 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சந்தனவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு சொந்தமான பட்டா நிலம் கடம்ப கண்மாய் தெற்கு பகுதியில் உள்ளது. அங்கு மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு தண்ணீர் தேக்கி வைக்க 4 அடி ஆழத்தில் நேற்று குட்டை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திருமயம் சந்தனவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்ததால் அந்தக் குட்டை மழை நீரால் நிறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பு(8) என்ற சிறுவனும் விமல்(10) என்ற சிறுவனும் குட்டை அமைக்கப்பட்ட பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் விழுந்த சிறுவர்கள் சேற்றில் மாற்றி உயிரிழந்தனர்.

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காணாத அவர்களின் பெற்றோர்கள் தேடியபோது குட்டையில் இரண்டு சிறுவர்களும் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு சிறுவர்களின் உடல்களையும் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களே குட்டையிலிருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.