2449 பேரை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆவது வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனைப் போக்க பள்ளிக் கல்வித்துறை புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 2449 முதுகலை பட்டதாரிகளை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பையும் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்ப அதிக நேரம் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிக பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு தற்காலிக பணியில் இருப்பார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 11 பாடப் பிரிவுகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேர்வு செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த ஆசிரியர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அந்தந்த பள்ளிகளில் நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள 2499 காலிப் பணியிடங்களில் அதிகபட்சமாக வேலூரில் 198 காலி இடங்களும், விழுப்புரத்தில் 186 காலி இடங்களும், திருவண்ணாமலை 169 காலி இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.