தமிழ்நாடு

குடும்ப வறுமையால் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் - கடலில் தவறிவிழுந்து உயிரிழப்பு

குடும்ப வறுமையால் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் - கடலில் தவறிவிழுந்து உயிரிழப்பு

Sinekadhara
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே குடும்ப வறுமையால் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 15-வயது சிறுவன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். உடலை கைப்பற்றி கடல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் உயரத்தெருவைச் சேர்ந்தவர் சகாய பிரான்சிஸ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 பெண், 4 ஆண் என 6 குழந்தைகள் உள்ளனர். சகாய பிரான்சிஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் உடல் நலக்குறைவால் வீட்டில் முடங்கிய நிலையில் வருமானமின்றி வறுமையில் தவித்த குடும்பத்தை அவரது 15-வயதான இளைய மகன் ரோஹித் டோனி மீன்பிடி தொழிலுக்கு சென்று காப்பாற்றி வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் ரோஹித் டோனி அதே பகுதியைச் சேர்ந்த ஆன்றனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலாளர்களுடன் தொழிலுக்கு சென்றிருக்கிறார். உடன் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் உள்பட 18 தொழிலாளர்கள் சென்றிருக்கின்றனர். படகு முட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்துல் செல்லும்போது ரோஹித் டோனி மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசியுள்ளார். அப்போது ரோஹித் டோனி எதிர்பாராமல் நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்திருக்கிறார். உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
நேற்று மாலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து படகு  ஓட்டுநர் பியஸ் குளச்சல் கடல் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சிறுவன் ஒருவன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.