தமிழ்நாடு

வாலாஜாபாத்தில் கண்டறியப்பட்ட 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள்!

வாலாஜாபாத்தில் கண்டறியப்பட்ட 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள்!

kaleelrahman

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ளது ஊத்துக்காடு கிராமம். இக்கிராமத்தில் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சதி கற்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறுகையில், "வாலாஜாபாத்தை அடுத்துள்ள கட்டவாக்கம் செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோயிலுக்கு அருகே சாலையோரம் இரண்டு சதி கற்களை கண்டறிந்தோம். மண்ணில் புதைந்து காணப்பட்ட இது, 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். சதிக்கல் என்பது ஒரு வீரன் தன் இனக் குழுவை காக்கவோ, ஊரை காக்கவோ அல்லது நாட்டைக் காக்க போரிடும்போது போர்களத்தில் வீரமரணம் அடைந்தால் இறந்த அவ்வீரனின் உடலுக்கு தீ மூட்டி சடங்குகள் செய்து அந்த தீயில் அவனின் மனைவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொள்வார். இந்நிகழ்விற்கு சதி என்று பெயர். அவ்வாறு உயிர்விட்ட தம்பதியரின் நினைவை போற்றும் வகையில் அந்த தம்பதியரின் உருவங்களை ஒரு கல்லில் சிற்பமாக செதுக்கி அந்த கல்லை நட்டு வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த கற்களுக்கு சதி கற்கள் என்று பெயர்.

நாங்கள் கண்டறிந்த ஒரு சதி கல் ஒன்றரை அடி உயரமும் ஒருஅடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில், வலது பக்கம் வீரனின் உருவம் காணப்படுகிறது வீரனின் தலையில் உள்ள கொண்டை நேராகவும் காதில் நீண்ட காதணிகளும் கழுத்தில் மணியாரமும், தோள்களில் வாகு வளையங்கள், கைகளில் காப்பு ஆகியவை காணப்படுகின்றன. மேலும் வீரனின் இடது கையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடி கொண்ட ஒரு போர்வாளை கீழ்நோக்கிய நிலையில் வைத்துள்ளார். அவரது கைகள் வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் பட்டாடையும் கால்களில் வீரக்கழலும் உள்ளது.

இடப்பக்கம் வீரனின் மனைவி வணங்கிய நிலையில் காணப்படுகிறார். அவரது கொண்டை இடப்பக்கமாக சாய்ந்த நிலையிலும் காது மற்றும் கழுத்தில் அணிகலன்கள, கைகளில் வளையல்கள் மற்றும் உடலுக்கு பட்டாடை ஆகியவை உள்ளது. இது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். வீரன் கையிலுள்ள போர்வாள் தரையை நோக்கி காட்டப்பட்டுள்ளதால் இவ்வீரன் இயற்கை மரணம் அடைந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம். இது சோழர்களின் இறுதிக் காலமாக இருக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்