கரூரில் 13 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையையும் விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென காணாமல் போனார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் வீட்டருகே உள்ள கலைச்செல்வி மற்றும் குமுதவல்லி ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக திருப்பூர் அழைத்துச் சென்று அங்கு கல்பனா, சந்தானம் மேரி, பிரதாப், சிவக்குமார், மணி ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா. சந்தான மேரி, பிரதாப், சிவக்குமார், மணி ஆகிய 7 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா இன்று சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் சிவக்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சந்தான மேரி, பிரதாப் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.