தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தின்பண்டம் வாங்க வந்த மாணவர்களிடம் தீண்டாமையை காட்டிய கடை வியாபாரி உட்பட இருவர் கைதான நிலையில், சம்பவம் நடந்த கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல அலுவலர் கந்தசாமி மற்றும் வருவாய் வட்டாட்சியர் பாபு ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது பள்ளி வகுப்பறையில் ஜாதி பாகுபாடு காட்டுவதாக மாணவர்கள் நேரில் புகார் தெரிவித்தனர். வகுப்பறையில் இருக்கைகளில் அமர அனுமதி இல்லை என்றும் தரையில் மட்டுமே அமர்ந்து கல்வி கற்கிறோம் என்றும் மாணவர்கள் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தனர். உணவுக்கு தட்டு வழங்குவது போன்றவற்றில் தீண்டாமை இருப்பதாக வேதனை தெரிவித்த மாணவர்கள் தீண்டாமை கொடுமையை ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடுத்தக்கட்ட விசாரணை சம்பந்தப்பட்ட பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியரிடமும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.