தமிழ்நாடு

”ஆளும் அரசுக்கு கடிவாளமாக நாம் செயல்பட வேண்டும்” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

”ஆளும் அரசுக்கு கடிவாளமாக நாம் செயல்பட வேண்டும்” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

நிவேதா ஜெகராஜா

“அரசு ஊழியர்களின் வாக்குகளில் வெற்றிபெற்று, இப்போது அவர்களுக்கே ஆப்பு வைத்திருக்கிறது இந்த அரசு. திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்று” என்று ஆளுங்கட்சிமீது குற்றம் சுமத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் பகுதியில் வல்லம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “இன்று இந்த ஆட்சி நடப்பது அரசு ஊழியர்களால் தான். இன்று அதிமுக 45 தொகுதிகளில் தோற்றது என்றால் அதன் பின்னணியில் 1,83,000 வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது. இந்த 1,83,000 வாக்குகள் அரசு ஊழியர்களின் வாக்குகள். இன்று அவர்களுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ‘அரசு ஊழியர்கள் எல்லாம் கொள்ளைக்காரர்கள்’ என்பதுபோல பேசியுள்ளார் அவர். எங்கள் ஆட்சியில்கூட அதை போல் சொன்னதில்லை. திமுக, ஆட்சிக்கு வரும்போது ஒன்று சொல்வார்கள்; வந்த பிறகு ஒன்று சொல்வார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வழியாக இவர்களுக்கு நாம் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். ஆளும் அரசுக்கு கடிவாளமாக நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஐந்து முறை வெற்றி பெற்று கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திமுக, தற்போது திறனற்று செயல்பட்டு வருகிறது. உலகத்திலே தனக்கு மட்டும்தான் பொருளாதாரம் தெரியும் என்பது போல் பேசும் நிதி அமைச்சர், எப்போதும் பணம் இல்லை பணம் இல்லை பணம் இல்லை என்று கூறுகிறார். இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில், பணமே இல்லை என்றாலும் அதனை எந்த வழியிலாவது ஏற்படுத்தி மக்கள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம் நாங்கள். அதுதான் மக்களுக்கான ஆட்சி. ஆனால் திமுகவோ குறைதான் சொல்கிறது. கடந்த 100 நாட்கள் ஆட்சியில் திமுக செய்த ஒரே சாதனை 4%, 10%, 15% கமிஷன் என முடிவு செய்தது மட்டும்தான்” என்று குற்றம் சாட்டினார்.