தமிழ்நாடு

''சரிம்மா...’’: நம்பிக்கையோடு போராடிய சுஜித்!

''சரிம்மா...’’: நம்பிக்கையோடு போராடிய சுஜித்!

webteam

கடைசியில் வீணாகிவிட்டது, எண்பது மணி நேரப் போராட்டம்!  கடந்த 25 ஆம் தேதி மாலை, விளையாடச் சென்ற சுஜித், தடுமாறி விழுந்தான் ஆழ்துளைக் கிணற்றுக்குள். சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த செல்லக் குழந்தை விழுந்ததைக் கண்டு பதறியது குடும்பம். அலறினார் தாய். இருந்தாலும் ஓடி வந்த உதவிகளால், நம்பிக்கையோடு இருந்தது குழந்தையின் குடும்பம்.  

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி, சில மணி நேரங்களிலேயே பரபரப்பானது. தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மீட்புக்குழு, தனியார் குழுக்கள் என நான்கு நாட்களாகத் தொடர்ந்தது மீட்பு பணி.
எப்படியும் குழந்தையை மீட்டுவிடலாம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தது இந்தக் குழுக்களும்.
 
இடையில் மண் சரிந்து லேசாக மூடியது சுஜித்தை. கொஞ்சம் பயம் ஏற்பட்டது, அப்போதுதான். பிறகு அருகிலேயே குழி தோண்ட ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மண்ணுக்குள் கடினப் பாறைகள், பாதை மறைக்க, தள்ளிக்கொண்டே போனது, மீட்கும் பணி. அதிகரித்தது பயம். சுஜித் நலமுடன் திரும்ப நான்கு நாட்களாக நடந்தன, மதங்கள் கடந்த பிரார்த்தனைகள்! தேவாலயங்கள், மசூதிகள், இந்துகோயில்களிள் தெய்வத்திடம் வைக்கப்பட்டன, ஆத்மார்த்த கோரிக்கைகள்.

ஆனாலும் ஏமாற்றிவிட்டான் சுஜித். சடலமாக அவன் மீட்கப்பட, கவலையோடு கண்ணீர் சுரக்கிறது தமிழகம்!

குழிக்குள் விழுந்ததும், சுஜித்திடம் அவன் அம்மா, கமலாமேரி, சொன்ன வார்த்தை:
''அம்மா உன்னைய தூக்கிருவேன் சாமி''. 

நம்பிக்கையோடு பதிலளித்தான் சுஜித், ''சரிம்மா''. 

பொய்யா போச்சே எல்லாம்!