தமிழ்நாடு

கோவையில் பைக் டாக்சி வாகனங்கள் பறிமுதல்

கோவையில் பைக் டாக்சி வாகனங்கள் பறிமுதல்

webteam

கோவையில் முறையான உரிமம் இல்லாமல் பைக் டாக்சியாக இயங்கிவந்த இருசக்கர வாகனங்களை கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் வாடகைக்கு (call taxi) எடுத்து பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நிறுவனங்கள் பிரத்யேகமாக உள்ளது. இந்த நிலையில் இருசக்கர வாகனங்களை வாடகை எடுக்கும் முறையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு சக்கர வாகனங்களில் கால் டாக்சி வணிகத்தில் முன்னணியாக இயங்கி வரும் நிறுவனங்களே, இந்த இருசக்கர வாகன பைக் டாக்சி தொழிலிலும் களம் இறங்கியுள்ளது. ஆனால், கார் டாக்சி போன்று பைக் டாக்சிக்கு எவ்வித உரிமமும் அரசால் வழங்கப்படவில்லை. எனவே இது சட்டவிரோதமான செயல் என கடந்த சில நாட்களாகவே கால் டாக்சி ஓட்டுனர்கள் புகார் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் கால் டாக்சி ஓட்டுனர்கள் தங்களின் தொழில் பைக் டாக்சியால் பாதிக்கப்படுவதாக கூறி ஆங்காங்கே இயங்கிவந்த பைக் டாக்சியை பிடித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், கோவை போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், சோதனையில் ஈடுபட்ட மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஓலா மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனம் சார்பில் கோவையில் பைக் டாக்சியாக இயங்கி வந்த 40 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதில் பல்சர், ஹோண்டா, யமஹா எப்.இசட் என விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பைக் டேக்சியாக இயங்கிவந்தது பறிமுதல் நடவடிக்கையில் தெரியவந்தது. பைக் டேக்சி இயக்குவதற்கு முறையான உரிமம் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும், பறிமுதல் செய்யப்பட வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகையை செலுத்தி, வாகனத்திற்கான முறையான ஆவணங்களை சமர்பித்து தங்களது வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.