மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல்கலாமை சிறந்த தலைவராகவும், அறிவியல் விஞ்ஞானியாகவும் விரும்பும் இளைஞர்கள் அதிகம். பல இளைஞர்கள் அப்துல்கலாமை தங்கள் முன் மாதிரியாகவும் கொண்டுள்ளனர். அந்த வகையில் அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட திருச்சி இளைஞர் ஒருவர் அவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.
திருச்சியில் சூரிய மின்கல தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் புஷ்பராஜ். பொறியியல் பட்டதாரியான இவர் அப்துல்கலாம் மீது கொண்ட பற்றாலும், ஈர்ப்பினாலும் அவருக்கென கோயில் கட்டியுள்ளார். தினமும் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அப்துல்கலாம் கோயிலில் வணங்கிவிட்டுத்தான் செல்வதாகவும், கனவு காணுங்கள் என்று அவர் சொன்ன வார்த்தை தன்னை இவ்வளவு தூரம் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.
மேலும் கூறிய அவர், ''அப்துல்கலாமின் கருத்துக்கள் என் மனதில் பதிந்துள்ளது. அந்த கருத்துகள் என்னை தூங்கவிடாமல் உழைப்பதற்கான ஒரு உத்வேகத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு அப்துல்கலாம் தான் காரணம்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் 2022ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வருமானம் ஈட்டுகின்ற நிறுவனமாக தன்னுடைய நிறுவனத்தை மாற்ற வேண்டும் என தினமும் உழைத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று அப்துல்கலாமின் பிறந்தநாள் என்பதால் கலாமின் கோயிலில் மலர் தூவி, அவரை நினைவுகூர்ந்த புஷ்பராஜ் இனிப்புகள் வழங்கி கலாமின் பிறந்தநாளை கொண்டாடினார்.