விளையாட்டு

மீண்டும் வம்புக்கு இழுத்த மஞ்ச்ரேக்கர் - கூலாக டீல் செய்த ஜடேஜா

மீண்டும் வம்புக்கு இழுத்த மஞ்ச்ரேக்கர் - கூலாக டீல் செய்த ஜடேஜா

JustinDurai

போட்டி முடிந்த பிறகு, 'என்னுடன் பேசுவதற்கு தயாரா?' என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வம்படியாக கேள்வி கேட்க, அதற்கு கூலாக பதிலளித்து விட்டுச் சென்றார் ஜடேஜா.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கும், முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்ததே. முன்னதாக கடந்த 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, ரவிந்திர ஜடேஜாவை சல்லி வீரர் என பகிரங்கமாகவே விமர்சனம் செய்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இதனால் கடுப்பான ரவிந்திர ஜடேஜா அளித்த பதிலில், “நீங்கள் விளையாடியதைவிட இரண்டு மடங்கு போட்டிகளில் விளையாடியுள்ளேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். முதலில் சாதனையாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீண் பிதற்றல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்” என பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்திய பிறகு ரவிந்திர ஜடேஜாவை பேட்டி எடுக்கும்போது மீண்டும் வம்புக்கு இழுத்தார் மஞ்ச்ரேக்கர். நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக பேட்டிங் ஆடிய ஜடேஜா 29 பந்தில் 35  ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து போட்டி முடிந்த பிறகு ரவிந்திர ஜடேஜாவை நேர்க்காணல் செய்த மஞ்ச்ரேக்கர், ''தற்போது ரவிந்திர ஜடேஜா என்னுடன் இணைந்துள்ளார். முதலில் நீங்கள் என்னுடன் பேசுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு ஜடேஜா "எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை நீங்கள் கேட்கலாம்" எனத் தெரிவித்தார்.

அதன்பிறகு போட்டியைப் பற்றி பேசிய ஜடேஜா, "நானும் ஹர்திக் பாண்டியாவும் போட்டியின் இறுதி வரை விளையாட விரும்பினோம். பாகிஸ்தான் அணியினர் மிகச்சிறந்த பந்துவீச்சைக் கொண்டுள்ளனர், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. நான் ஆட்டத்தை முடித்திருக்கலாம், ஆனால் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினார். அவரிடம் தெளிவான திட்டமிடல் இருந்தது. பெரிய ஷாட் அடிப்பதில் உறுதியாக இருந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி வரை இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.

அடுத்ததாக ஹாங்காங் அணியை எதிர்த்து வரும் புதன்கிழமை இந்திய அணி விளையாட இருக்கிறது.
 
இதையும் படிக்க: 'நான் பார்த்துக்கிறேன்' - அசால்ட் செய்த ஹர்திக் பாண்டியா