விளையாட்டு

தோனி வைத்த நம்பிக்கையை காப்பற்றிய 2007 டி20 உலகக்கோப்பையின் ஹீரோ ஓய்வு!

தோனி வைத்த நம்பிக்கையை காப்பற்றிய 2007 டி20 உலகக்கோப்பையின் ஹீரோ ஓய்வு!

webteam

2007 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி ஓவரை வீசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜோகிந்தர் சர்மா, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2007 முதல் டி20 உலகக்கோப்பை

2007ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி, டி20 உலகக்கோப்பையை வென்று அறிமுகத் தொடரிலேயே மகுடம் சூடியது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கடைசி ஓவரில் அவ்வணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்தார். கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா, 3வது பந்தில் மிஸ்பாவின் விக்கெட்டை வீழ்த்தி, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன்மூலம் இந்திய அணி அறிமுகப் போட்டியிலேயே டி20 கோப்பையை வென்று அசத்தியது.

ஜோகிந்தர் சர்மாவுக்கு கடைசி ஓவர்

இந்தப் போட்டியில் யூசுப் பதான், ஹர்பஜன் சிங் ஆகிய சீனியர் வீரர்களுக்கு தலா 1 ஓவர் மீதி இருந்தபோதும், கடைசி ஓவரை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மாவுக்குக் கொடுத்ததுதான் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அனுபவமில்லாத ஒரு வீரருக்கு, தோனி வழங்கியிருக்கிறாரே? இதனால் இந்தியா தோற்கப்போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டனர். ஆனால், ஜோகிந்தர் சர்மாவோ தோனி தம்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா முதல் பந்தை வைடாக வீசினார். 2வது பந்தைச் சந்தித்த மிஸ்பா உல் ஹுக் சிக்ஸருக்குத் தூக்கிப் பிரமாதப்படுத்தினார். இதனால், மைதானத்தில் மேலும் பதற்றம் அதிகமாகியது.

மைதானத்தில் தோனி கூறிய அறிவுரை

அப்போது ஜோகிந்தரை அழைத்த தோனி, “பதற்றப்படாதே. எதைப்பற்றியும் கவலைப்படாதே. உன் விருப்பப்படியே பந்துவீசு. ஆனால், அவர் அடித்து ஆடும்படி பந்துவீசாதே. நிச்சயமாக, இந்த ஓவரில் அவரை வெளியேற்றிவிடலாம். நீ திறமையாகப் பந்துவீசு. ஒருவேளை, இந்தியா தோல்வியைச் சந்தித்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனச் சொல்லி அவரைத் தைரியப்படுத்தினாராம். அதற்குப் பிறகுதான், மிஸ்பா ஸ்கூப் விளையாடுவதை அறிந்து, தாம் பந்தின் வேகத்தைக் குறைத்து 3வது பந்தை மெதுவாக வீசியதாகவும், தாம் நினைத்தப்படியே அது, ஸ்ரீசாந்த் கையில் கேட்சாக மாறியதாகவும் ஜோகிந்தர் சர்மா இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடைசி ஓவர் வீசக் காரணம் என்ன

கடைசி ஓவர் ஹர்பஜன் சிங்கிற்கு வழங்குவதாகவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீரென, அவரிடமிருந்து அந்த ஓவர் பறிக்கப்பட்டு ஜோகிந்தருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், அந்தத் தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகக் கடைசி ஓவரை வீசியிருந்ததும் ஜோகித் சர்மாதான். அந்த நம்பிக்கையில்தான் அவருக்கு இறுதிப்போட்டியிலும் கடைசி ஓவர் வழங்கப்பட்டதாகவும், இந்தப் போட்டியில் கடைசி ஓவரை தாம் வீசுவதற்கு அதிக சந்தோஷப்பட்டதாகவும் ஜோகிந்தரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இதன்பிறகு, ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று 16 ஆட்டங்களில் விளையாடினார். 2011ல் கார் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சில காலம் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடாமல் இருந்தார். அதன்பிறகு 2012-13 உள்ளூர் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 2022ல் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றார். இந்த நிலையில், 39 வயதான ஜோகிந்தர் சர்மா, அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அடுத்த பயணம்

ஓய்வு குறித்து ஜோகிந்தர் சர்மா, “அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். 2002-2017 வரையிலான கிரிக்கெட் பயணம் எனது வாழ்க்கையில் மிகவும் அற்புதமானது. கிரிக்கெட் உலகில் அடுத்த அத்தியாயத்தில் வேறு பணிகளில் ஈடுபட இருக்கிறேன். நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தின் அடுத்த படியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி பாராட்டிய நிஜ ஹீரோ

39 வயது ஜொகிந்தர் சர்மா, இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரை 4 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 77 முதல்தர ஆட்டங்களில் 5 சதங்களுடன் 2804 ரன்களும் 297 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தபோது, ஊரடங்குப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஜோகிந்தர் சர்மாவை ஐசிசி பாராட்டியிருந்தது. 2007ல் உலகக்கோப்பை ஹீரோ எனவும், 2020ல் நிஜ உலகின் ஹீரோ எனவும் அவரைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.