அங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட்டில் 19 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடர் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் வீரர் 83.00 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை வீச வேண்டும்.
இதில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே ஈட்டியை 88.77 மீட்டர் வரை எறிந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதிகமான தொலைவிற்கு வீசியதன் மூலம் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான மன்னுவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்கள் முன் நடந்த டைமண்ட் லீக் தடகள போட்டியிலும் நீரஜ் சோப்ரா இரண்டாவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அது குறித்து பேசிய அவர், “நான் என்னுடைய வெற்றியை தேடிக்கொண்டிருந்தேன், அதன்படி இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் நான் மீண்டும் பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறேன். என்னை வலிமையாக்கும் சில விஷயங்களைச் சரிசெய்ய விரும்புகிறேன். லொசன் டைமன் லீக் போட்டியில் நான் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். முதல் முறையாக பட்டம் வென்ற நிலையில், தற்போது மீண்டும் வென்றுள்ளேன். அடுத்த வருடம் 3வது டைட்டிலையும் வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த போட்டியான புடாபெஸ்ட் எனக்கு பெரிய போட்டியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.