இந்த ஆண்டு முதல்முறையாகத் தொடங்க இருக்கும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஏலம் எடுக்க 30 நிறுவனங்கள் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் ஆடவர் ஐபிஎல், பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆடவருக்கான ஐபிஎல்லைப் போன்றே மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
ஐபிஎல் மகளிர் அணிகள்
இதற்கான செயல்பாடுகள் கடந்த ஆண்டு முதலே நடைபெற்று வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டே மகளிர்க்கான ஐபிஎல்லை பிசிசிஐ தொடங்க இருக்கிறது. அதற்கான களத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் தொடங்க உள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.
30 நிறுவனங்கள் போட்டி
இந்த அணிகளை வாங்க ஆடவர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் 5 பேரைத் தவிர, இன்னும் சிலரும் ஆர்வம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக 40 விண்ணப்பங்களைப் பெற்ற பிசிசிஐ, அதில் 30ஐ இறுதிக்கட்டமாகத் தேர்வு செய்துள்ளது. அந்த 30 நிறுவனங்களில், அதானி குழுமம், ஜிஎம்ஆர், ஜேஎஸ்டபுள்யூ, காப்ரி குளோபல், ரூட் மொபைல்ஸ், இன்போஃசிஸ், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய பெரிய நிறுவனங்களுடன் நாக்பூரில் புகழ்பெற்ற இனிப்பு விற்பனை நிறுவனமான ஹால்டிராம் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க உள்ளது. இது தவிர, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் அதிகளவில் பங்கேற்க உள்ளன.
பட்டியலில் தமிழக நிறுவனங்கள்
குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செட்டிநாடு, ஸ்ரீராம், நீலகிரி குழுமங்கள் விண்ணப்பங்களை வாங்கி உள்ளன. செட்டி நாடு சிமென்ட் நிறுவனம்போல் ஜேகே சிமென்ட் நிறுவனம் தயாராகி உள்ளது. அமீரகம் உள்பட வெளிநாடுகளில் டி20 அணிகளை வைத்திருக்கும் தொழில் நிறுவனங்களும் களமிறங்கி உள்ளன. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனம் கையாளும் சொத்தின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலகிய ஆடவர் ஐபிஎல் உரிமையாளர்கள்
மேலும், இந்த ஏலத்தின்போது ஒவ்வோர் அணியும் ரூ.500லிருந்து ரூ.600 கோடி வரை ஏலம் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிகபட்சம் ரூ.800 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஏலம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலம் பட்டியலில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் விலகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மகளிருக்கான 5 ஐபிஎல் அணிகள் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களை வைத்து பிரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
- ஜெ.பிரகாஷ்