Djokovic Racket Smash Twitter
விளையாட்டு

விரக்தியில் டென்னிஸ் மட்டையை உடைத்தெறிந்த ஜோகோவிச்! அதிகப்படியான அபராதம் விதித்த விம்பிள்டன்!

2023 விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தன்னுடைய டென்னிஸ் மட்டையை உடைத்ததற்காக ஜோகோவிச்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் என்றாலே, விறுவிறுப்புக்கும் சாதனைக்கும் பஞ்சம் இருக்காது. லண்டனில் நடத்தப்பட்ட 2023 விம்பிள்டன் டென்னிஸ் தொடரானது மற்ற அனைத்து வருடத்தையும் விட, நடப்பாண்டு அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. மகளிர், ஆடவர், வீல் சேர் என அத்தனை பிரிவிலும் ஜாம்பவான் வீரர்களை இளம் வீரர்கள் வீழ்த்தி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அந்தவகையில் “60 வருடத்தில் யாரும் பெறாத வெற்றியை பெண்கள் ஒற்றையர் பிரிவில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும், வீல் சேர் பிரிவில் நம்பர் 1 வீரர் ஆல்ஃபி ஹெவெட்டை வீழ்த்திய 17 வயது டோகிடோ ஓடாவும், 60 வருடத்தில் முதல்முறையாக விம்பிள்டன் வென்ற 17 வயது பிரிட்டிஸ் சிறுவன் ஹென்றி சியர்ல், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆன்ஸ் ஜபியர் மற்றும் ஜோகோவிச்சின் தகர்க்க முடியாத கோட்டையை தகர்த்த அல்கராஸ்” என கொண்டாட்டத்திற்கும் ஆச்சரியத்திற்கும் பஞ்சமில்லாத விம்பிள்டன் தொடராக அமைந்து விருந்து படைத்தது.

“24-வது கிராண்ட்ஸாம் ; 8-வது விம்பிள்டன் ; 35 தொடர் வெற்றி” - அத்தனையும் பாழாக்கிய அல்கராஸ்!

தன்னை எதிர்த்து விளையாடிய அனைத்து வீரர்களையும் தோற்கடித்து அடுத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை எட்டியிருந்தார், ஜாம்பவான் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச். இந்த இறுதிப்போட்டியில் மட்டும் வென்றுவிட்டால் அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் (23 முறை) வென்றவரான ஜோகோவிச், “தன்னுடைய 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது, 8-வது விம்பிள்டனை வென்று பெடரர் சாதனையை சமன் செய்வது, விம்பிள்டன் புல்தரை மைதானத்தில் தொடர்ச்சியாக 35வது போட்டியை வெல்வது, தொடர்ச்சியாக 5-வது கிராண்ட்ஸ்லாம் வெல்வது” என பல சாதனைகளை குவிக்கும் முனைப்பில் இருந்தார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் உலகை ஆட்டம் காணவைத்து, புதிய நம்பர் 1 வீரராக வலம் வரும் ஸ்பெய்ன் நாட்டைச்சேர்ந்த 20 வயதேயான கார்லோஸ் அல்கரஸ் ஜோகோவிச்சின் கனவை பாழாக்க வந்து நின்றார். 2021ம் ஆண்டு ரோம் மாஸ்டர்ஸ் தொடரில் ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அப்போ அவருடைய வயது வெறும் 18-ஆக தான் இருந்தது. இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியிலும் ஏதாவது மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். எல்லோரும் எதிர்ப்பார்த்ததை போலவே 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என விம்பிள்டன் பைனலை வென்று சாதனை படைத்தார்.

விரக்தியில் டென்னிஸ் மட்டையை உடைத்த ஜோகோவிச்! அபராதம் விதித்த விம்பிள்டன்!

இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அற்புதமாக விளையாடிய ஜோகோவிச் எளிதாகவே அல்கராஸை வீழ்த்தினார். முதல் செட்டை 6-1 என சுலபமாக வீழ்த்தியதை பார்க்கும் போது நேர் செட் கணக்கில் வென்று ஈசியாக பட்டத்தை தட்டிச்சென்றுவிடுவார், இறுதிப்போட்டிக்கான அழுத்தத்தை எல்லாம் அல்கராஸ் தாங்க மாட்டார் என்றே நினைக்கத்தோன்றியது. ஆனால் உலகின் தலைசிறந்த வீரருக்கு எதிராக தன்னுடைய மட்டையை அற்புதமாக சுழற்றினார், அல்கராஸ். இரண்டாவது செட்டை போராடி கைப்பற்றிய அல்கராஸ், அதற்கு பிறகு ஒரு மாயாஜாலமே நிகழ்த்தினார்.

சில அற்புதமான ஷாட்களை ஆடி ஜோகோவிச்சை ஆச்சரியப்படுத்திய அல்கராஸ், அவரின் மீது கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தை அதிகரித்தார். பின்னர், அவரின் மனநிலையை சரியாக கையாண்ட அல்கராஸ், சில பிரமாதமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். முக்கியமான செட் பாய்ண்டிற்காக விளையாடிய ஜோகோவிச், பந்தை சரியாக பாய்ண்ட் செய்து முன்னேறிக்கொண்டிருந்தார். நெட்டின் அருகே சென்று எளிதான பாய்ண்ட் அவுட்டிற்கு தயாராக இருந்த ஜோகோவிச்சை, சிறப்பான நகர்த்தலின் மூலம் ஜோகோவிச்சை ஏமாற்றி பாய்ண்ட்ஸை தட்டிச்சென்றார் அல்கராஸ். சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த ஏமாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஜோகோவிச், நெட் போஸ்ட்டுக்கு எதிராக சென்று தன்னுடைய டென்னிஸ் மட்டையை அடித்து நொறுக்கினார்.

ஜோகோவிச்சின் இந்த செயலுக்காக 8000 அமெரிக்க டாலரை அபராதமாக விதித்துள்ளது விம்பிள்டன் நிர்வாகம். இந்த தொடரில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவாகும். போட்டியின் முடிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராஸுக்கு 24 1/2 கோடியும், ரன்னராக வந்த ஜோகோவிச்சுக்கு 12 1/2 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.