ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி, இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஜோடியான நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.
முன்னதாக காலியிறுதிப்போட்டியில் எதிர்த்து விளையாடவிருந்த லாட்வியா மற்றும் ஸ்பானிஸ் நாட்டின் ஜோடியானது போட்டியில் இருந்து விலகியதால் இந்திய ஜோடி எளிதாகவே அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் இந்த ஜோடி எப்படி விளையாடபோகிறது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஜோடியான நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடியானது, 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருகிறது.இறுதிப்போட்டியானது ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் உலகில், மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றப் பெருமையையும் அவரையே சேரும். மேலும், இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். அத்துடன் 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சானியா வயது மூப்பு மற்றும் ஓய்வின்மையால் பிப்ரவரி மாதத்தோடு அனைத்து டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப் போவாதாக அறிவித்துள்ளார். இதனால் இந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தோடு அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய டென்னிஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.