விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப், சேஹல்? அஸ்வின், ஜடேஜா அவ்ளோதானா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப், சேஹல்? அஸ்வின், ஜடேஜா அவ்ளோதானா?

webteam

கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த சில வருடங்களாக சோதனையான காலகட்டம்தான். ’யோ- யோ’ , அவர்களை பேயாய்ப் படுத்திய நிலையில், அதில் வெற்றி பெறவே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அடுத்து யாரை தேர்வு செய்வது, யாரை உட்காரவைப்பது என்கிற குழப்பம். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதால் ஆடும் லெவனில் இடம்பெற கடும் போட்டி. இதையடுத்து டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, டி20-க்கு என வீரர்கள் பிரிக்கப்பட்டனர். 

டி20, ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்புக் கிடைக்காத வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றனர். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் என, புஜாரா, முரளி விஜய், முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டனர். அதற்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வந்த முரளி விஜய், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இதனால் நொந்து போனார்கள். இந்நிலையில் அஸ்வின், ஜடேஜாவுக்கு வந்திருக்கிறது அடுத்த செக்! 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டியின் முதல் போட்டியில் இங்கிலாந்து வீரர்களை திணறடித்து 5 விக்கெட்டுகளை அள்ளினார் குல்தீப். அப்போதே கதி கலங்கிய இங்கிலாந்து வீரர்கள், மெர்லின் பவுலிங் மெஷினில் பயிற்சி பெற்று அடுத்தப் போட்டியில் அவரை சமாளித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் மிரட்டியிருக்கிறார், இந்த ’சைனாமேன்’ பந்துவீச்சாளர். 

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, டெஸ்ட் போட்டியில் குல்தீப்பை சேர்ப்பது பற்றி கேட்ட கேள்விக்கு, அதில் ஆச்சரியங்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது குல்தீப்புக்கும் சேஹலுக்கும் வாய்ப்பளிக்கலாம் என்பதை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். 

அப்படி அவர்கள், அணியில் சேர்க்கப்பட்டால், டெஸ்ட் பவுலர்களாக இருக்கிற அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

‘அஸ்வினும் ஜடேஜாவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். குல்தீப், சிறப்பாகவே செயல்பட்டாலும் அவர்களை விட்டுவிட முடியாது’ என்றும் கூறுகிறார்கள்.  இந்நிலையில் அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. இதிலும் குல்தீப் கலக்கினால், டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக அவர் இடம்பெறுவார். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நஸீர் ஹூசைன் கூறும்போது, ’குல்தீப்பை சமாளிக்க இங்கிலாந்து வீரர்கள் எதையாவது செய்ய வேண்டும். அவர் இப்படியே விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருந்தால், டெஸ்ட் தொடரிலும் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அங்கும் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திவிடுவார்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் சைனாமேன் வகை பந்துவீச்சாளர் பிராட் ஹாக், சில நாட்களுக்கு முன் கூறும்போது, இங்கிலாந்து தொடரில் குல்தீப் மிரட்டுவார் என்று கூறியிருந்தார். அதுதான் நடந்திருக்கிறது. அதோடு டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டால் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்றும் கூறியிருந்தார். அவர் சொன்னது நடக்கும் போலிருக்கிறது. 
அப்படியென்றால், அஸ்வின், ஜடேஜா?