விளையாட்டு

இம்முறை ஆஸி. வீரர்கள் வம்பு சண்டையிடாதது ஏன்?: சேவாக் சுவாரஸ்ய கருத்து

இம்முறை ஆஸி. வீரர்கள் வம்பு சண்டையிடாதது ஏன்?: சேவாக் சுவாரஸ்ய கருத்து

rajakannan

ஆஸ்திரேலிய வீரர்கள் தனது வழக்கமான பாணியில் இந்திய வீரர்களுடன் வம்பு சண்டை எதுவும் செய்யாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த கால் நூற்றாண்டு கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்து புகழின் உச்சியில் இருந்தது, ஆஸ்திரேலிய அணி. ஆனால் வெற்றிகளுக்கு மட்டுமல்ல Sledging எனப்படும் வம்பு சண்டைக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் பெயர் பெற்றவர்கள். குறிப்பாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியில் இது அதிகமாக இருந்தது. எதிரணி வீரர்களை வம்பு சண்டைக்கு இழுத்து எளிதில் உணர்ச்சிவசப்பட வைத்துவிடுவார்கள்.

இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் தனது வழக்கமான வம்பு சண்டைகள் எதையும் செய்யவில்லை. கேப்டன் விராட் கோலிக்கும், கீப்பர் வேடுக்கும் இடையே மட்டும் லேசான வாய்ச்சண்டை நடைபெற்றது. இதைத் தவிர சொல்லும்படி எதும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பு சண்டையில் ஈடுபடாதது குறித்து கருத்து தெரிவித்த சேவாக், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிகப்பெரிய அளவிலான ஐ.பி.எல். போட்டிகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள். இந்திய வீரர்களுடன் அவர்கள் வாய் சண்டையில் ஈடுபட்டால், ஐ.பி.எல். உரிமையாளர்கள் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்க யோசிக்கக் கூடும். இதுதான் இந்திய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணியினர் வாய் சண்டையில் ஈடுபடாததற்கு காரணம் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும். “சிறந்த வீரர்கள் யாரும் தற்போது இல்லாததால் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியில் விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பிஞ்ச் ஆகிய சில வீரர்களை மட்டும் நம்பி உள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.