விளையாட்டு

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சறுக்கிய 5 இடங்கள்! அடுத்து காத்திருக்கும் சவால்கள்!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சறுக்கிய 5 இடங்கள்! அடுத்து காத்திருக்கும் சவால்கள்!

Rishan Vengai

டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியதை அடுத்து, எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்குள் இந்திய அணிக்குள் என்னென்ன மாற்றம் செய்யப்பட வேண்டும், எப்படி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல அணியை தயார் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இந்திய அணி தள்ளப்பட்டிருக்கிறது.

அரையிறுதியில் மோசமான தோல்வி! அடுத்து என்ன?

2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறாமல் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில், இந்திய அணி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைத்தொடரை வெல்ல இப்போதிலிருந்தே தயார் ஆகவேண்டிய பொறுப்பு இந்திய அணி நிர்வாகத்திற்கும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் அதிகமாகவே உள்ளது.

எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை முழுக்க முழுக்க இந்திய ஆடுகளங்களிலேயே நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணி எவ்வாறு தயார் ஆகப்போகிறது மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கான டி20 அணியை எப்படி தயார் செய்யப்போகிறது என்ற கேள்வி அதிகமாகவே எழுகிறது.

இந்நிலையில், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் எங்கே இந்தியா சறுக்கியது என்றும், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்திய அணி என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

டி20 உலகக்கோப்பையில் சறுக்கியதற்கான காரணங்கள்

அதிக சோதனை முயற்சிகள் செய்தும், ஆடும் 11 வீரர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

எந்த டி20 உலகக்கோப்பைக்கும் இவ்வளவு சோதனை முயற்சியில் இந்திய அணி இறங்கியதே இல்லை. அத்தனை சோதனை முயற்சிகள் செய்தும், கடைசி வரை ஆடும் 11 வீரர்கள் யார் என்ற குழப்பம் நீடித்துகொண்டே இருந்தது. 3 விதமான டி20 அணிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிரான தொடர்களுக்கும் அனுப்பப்பட்டன, அதில் பயன்படுத்தப்பட்ட எந்த வீரர்களும் ஆடும் அணிக்குள் எடுக்கப்பட வில்லை. கடைசி வரை எதற்காக அந்த சோதனை முயற்சி என்றே தெரியவில்லை. சிறப்பான தொடக்கம் கொடுத்த சுப்மன் கில்லும், தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட ஆவேஷ் கானும் எடுக்கப்படவே இல்லை. மற்றபடி காயம் காரணமாக வெளியில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எதற்காக இரண்டு ஸ்பின்னர்கள்? இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் பயன்படுத்தி இருக்கலாம்!

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவில், எதற்காக இரண்டு ஸ்பின்னர்களை எடுத்து சென்றிருக்க வேண்டும். இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை அணிக்குள் எடுத்திருந்தால், இந்திய அணி இன்னும் வலுவான அணியாக தெரிந்திருக்கும். கடைசியில் வந்து அடிக்ககூடிய பவுலர் வேண்டுமென்றாலும், தீபக் சாஹர் சமீபத்தில் டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஏன் அணியில் இல்லை!

புவனேஷ்வர் குமாருக்கு பிறகு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்றால் அது லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் தான். இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 85 போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் எடுத்த வீரராக உள்ளார். ஒரு அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகளை எடுத்த ஒரு வீரர், அந்த அணிக்காக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்ற கொடுமை எல்லாம் இந்திய அணியில் மட்டும் தான் நடக்கும்.

ஏன் முகமது ஷமி? ஷமிக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதா!

இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளரான பும்ரா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, அவருக்கான இடம் காலியாகவே இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் வரை கூட பும்ராவிற்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவே இல்லை. பின்னர் பும்ராவின் மாற்றுவீரர் முகமது ஷமி தான் என அறிவிக்கப்பட்டது.

ஸ்டேண்ட் பை பிளேயர்கள் என்ற ஒன்று எதற்காக இருக்கிறது என்பது இங்கு நமக்கு விளங்கப்படவே இல்லை. ஆடும் அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு அடிபட்டாலோ விளையாட முடியாமல் போனாலோ பயன்படுத்த தான் ஸ்டேண்ட் பை பிளேயர்கள் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. ஆனால் இந்திய அணியில் அதற்கு மாற்றாக வெளியில் இருந்து ஓய்வில் இருந்த ஒரு வீரர் நேரடியாக அணிக்குள் எடுக்கப்படுகிறார்.

சரி அப்படி எடுக்கப்பட்டாலும் முகமது ஷமியை பேக்கப் செய்து நிறைய வலைப்பயிற்சிகள் வழங்கப்பட்டு முக்கியமான போட்டிகளில் மட்டும் களமிறக்கியிருக்கலாம். அல்லது பவர்பிளே ஓவர்களில் தொடர்ந்து ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.

கேஎல் ராகுல் வேண்டுமா..வேண்டாமா? - ரிஷப் பண்டா! தினேஷ் கார்த்திக்கா!

காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த வீரரான கேஎல் ராகுலை எதற்காக அணியில் எடுக்க வேண்டும். தொடர்ந்து அவர் சொதப்பினாலும் எதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர்கள் பார்ம் அவுட்டில் இந்ததே இந்தியாவின் தோவ்விக்கு பெரிய காரணமாக அமைந்தது. மற்றொரு புறம் ரிஷப் பண்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் இறுதி வரை ஓயவில்லை. நீங்கள் வீரர்களை பார்த்தால் கோப்பையை கைவிட வேண்டியது தான்.

உலகக்கோப்பைகான அணித்தேர்வில் இப்போதும் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் முடிவுகளில் பலவீரர்களுக்கு மனக்கசப்பு இருந்தாலும் அணிக்கு தேவையான ஒன்றை தோனி செய்ததால் தான் அவர் தலைமையில் கோப்பையை தட்டி சென்றது இந்திய அணி. அணிக்குள் என்ன செய்யவேண்டும், எந்த வீரர்கள் என்ற உறுதியான தேடல் அணித்தலைவருக்கு இல்லாதது தான் தோல்விக்கு இன்னொரு பெரிய காரணமாக அமைந்தது.

தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், முகமது ஷமி இந்த வீரர்கள் அணியில் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு என்ன செய்ய வேண்டும் இந்திய அணி

எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை முழுவதும் இந்தியாவில் நடக்கவிருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும். 2011 க்கு பிறகு ஒரு நல்ல வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கவிருக்கிறது, 2011 உலகக்கோப்பை தொடர் கூட வங்கதேசம் மற்றும் இந்தியாவில் பகிர்ந்து தான் நடத்தப்பட்டது. இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பைத்தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறவிருப்பதால், அதற்கு தகுந்த இந்திய அணியை அணி நிர்வாகம் தேர்வு செய்யவேண்டும்.

இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரை எதிர்கால நட்சத்திர பிளேயர்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால், பந்துவீச்சை பொறுத்தவரை நட்சத்திர மாறும் வீரர்களை இந்திய உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இன்னும் இருக்கிறது.

சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ள அணியாகவும், யுவராஜ் மற்றும் தோனி சென்ற பிறகு இன்னும் வெற்றிடமாகவே காட்சியளிக்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தும் முக்கிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.