விளையாட்டு

“அதே ஆக்ரோஷத்துடன் விளையாடுங்கள்” - தோனிக்கு அசாருதீன் அறிவுரை

“அதே ஆக்ரோஷத்துடன் விளையாடுங்கள்” - தோனிக்கு அசாருதீன் அறிவுரை

rajakannan

எப்பொழுதெல்லாம் தோனி விளையாடுகிறாரோ, அப்போதெல்லாம் ஆக்ரோஷத்துடனே விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தோனியின் ஓய்வு குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில், தோனியின் நிலை குறித்து அசாருதீன் பேசியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அசாருதீன், “ஒரு வீரர் விளையாட விரும்பினால், அவர் எவ்வளவு நாள் விளையாடுவார், எப்படி விளையாடுவார், என்ன நடக்கும் என்பதை தேர்வுக் குழுவினர் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பெரிய வீரர்களை பொறுத்தவரை அவர்களும், தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும். சில முடிவுகள் வெளியாகும் என நினைக்கிறேன். அப்படியில்லை என்றால், தோனி ஓய்வு பெற வேண்டும் அல்லது ஓய்வு பெறக் கூடாது என மக்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில், தோனியிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. 

நூறு சதவீத உடல்தகுதியும், பேட்டிங் திறமையும் இருந்தால் அவர் நிச்சயம் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. சில நேரங்களில், அதிகமாக போட்டிகளில் விளையாடிய பிறகு கொஞ்சம் ஆர்வம் குறையும். அவரது ஆர்வம் நூறுசதவீதம் இருந்தால், அவர் ஒரு திறமையான வீரர், அவர் விளையாட வேண்டுமெனவே நினைக்கிறேன்.

ஆனால், ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் தோனியிடம் கேட்டுக் கொள்கிறேன். தோனி விளையாடும் பொழுதெல்லாம் அவர் ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். சில நேரங்களில் வயதானால், ஆட்டத்தில் மந்தம் ஏற்படும். ஆனால், தோனியின் ஆட்டம் அப்படி மந்தமாகிவிட்டதாக தெரியவில்லை. அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை நிறைய போட்டிகளில் விளையாடினால், இந்திய அணிக்கு சிறந்தது.

தோனி இரண்டு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு, அதன்பிறகு, தன்னுடைய முடிவை அறிவிப்பார். எப்பொழுது எடுத்தாலும் அவர் தெளிவான முடிவினை எடுப்பார்” என்று கூறியுள்ளார்.