தோனியை திட்டியது சரியான நடத்தை அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்காக பங்கேற்ற தோனி, 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இதே நாளில் அசத்தலான சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்காக தோனி 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
அன்றைய போட்டிக்கு முன்பு வரை அவரின் அதிகபட்ச ரன் 12 மட்டுமே. தோனி தான் பங்கேற்ற முதல் போட்டியில் துரதிருஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் அப்போது நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய தோனி 148 ரன்களை குவித்தார். இந்த சதம் இப்போது வரை கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தத் தொடரில் இந்திய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரின் போது ஒரு கேட்சை தோனி விட்டதற்காக பவுலரான நெஹ்ரா அவரை கடுமையாகத் திட்டியிருப்பார். இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ விசாகப்பட்டின போட்டியின்போது நடந்தது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கையில், அதற்கு நெஹ்ராவே பதிலளித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள நெஹ்ரா "பலரும் அது விசாகப்பட்டினம் போட்டி என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அந்தச் சம்பவம் நடைபெற்றது பாகிஸ்தானுக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில். அந்தப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் அப்ரிதி என்னுடைய பந்தை சிஸ்ருக்கு அடிப்பார், அடுத்தப் பந்தையும் அவர் சிக்ஸருக்கு விரட்ட முயற்சிப்பார், ஆனால் அது பேட்டின் நுணியில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும், ஸ்லிப் பீல்டர் டிராவிட்டுக்கும் நடுவே செல்லும். அப்போது கேட்சை தவறவிட்டதாக எண்ணி தேனியைக் கடுமையாகப் பேசிவிட்டேன்"எனக் கூறியுள்ளார்.
மேலும் அது குறித்து நினைவுக் கூர்ந்த நெஹ்ரா "அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். போட்டி முடிந்த பின்பு தோனியும் டிராவிட்டும் என் செயலை நியாயப்படுத்தினர். ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும் நான் அன்று தோனியிடம் நடந்துக்கொண்ட விதம் சரியல்ல" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.