உலகக்கோப்பை கால்பந்து தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி, லீக் சுற்றைக் கடக்கவே பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஜொலிக்காதது அர்ஜென்டினாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி, நடப்புத் தொடரில் லயோனல் மெஸ்சி தலைமையில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்தை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரா செய்து ஏமாற்றம் அளித்தது அர்ஜென்டினா. வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடிக்க, போட்டி ஒன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 20 ஆவது இடத்தில் உள்ள குரேஷிய அணியுடன் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தியது. அர்ஜென்டினாவில் மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்டதை, குரேஷிய அணி சாதகமாக்கி சாதித்தது. 3 கோல்களை வாங்கிய அர்ஜென்டினா, ஒரு கோல்கூட அடிக்காமல் தோல்வியடைந்தது.
டி பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி, ஒரு புள்ளி மட்டுமே பெற்று 3ஆவது இடத்தில் பின்தங்கியுள்ள அர்ஜென்டினா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் குரேஷிய அணி ஏற்கனவே அடுத்த சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில், லீக் சுற்றைக் கடக்க இரண்டாவது இடத்தில் உள்ள ஐஸ்லாந்து அணியின் போட்டி முடிவும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
வாழ்வா? சாவா என நடைபெற்ற தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலகக் கோப்பை தொடருக்கு அழைத்து வந்த மெஸ்சியின் மேஜிக், குரூப் சுற்றிலும் நிகழுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கால்பந்து ரசிகர்கள்.
இதில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரின் கருத்தும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோல்வி குறித்து பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்பவுலி கூறுகையில், “லியோனல் மெஸ்சி தனது அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்ல முடியவில்லை. தற்போதைய அர்ஜென்டினா அணியின் யாதார்த்தம் மெஸ்சியின் திறமையை வெளிக்கொண்டு வரும் நிலையில் இல்லை” என்றார்.