ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அருகே உள்ள சந்திரா கிராமத்தில் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தவர் நீரஜ் சோப்ரா. விவசாயம் சார்ந்த குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுடன் பிறந்த நீரஜ் சோப்ரா சண்டிகரில் பட்டப்படிப்பும் பஞ்சாப்பில் இளங்கலைப் படிப்பும் படித்தவர்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த உலக யு20 சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதன்மூலம் ‘20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உலக சாம்பியனான முதல் இந்திய தடகள வீரர்’ என்ற சாதனையையும் உலக சாதனையையும் படைத்தார் அவர்.
இதையடுத்து 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் காயம் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. ஒருவேளை அவர் அதில் கலந்துகொண்டிருந்தால், ‘2016 ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்கு தங்கம் உறுதி செய்யப்பட்டிருக்கும்’ என சொல்லப்பட்டது.
தொடர்ந்து பல போட்டிகளில் தங்கம், வெள்ளி என தொடர்ச்சியாக பட்டங்களை வென்றார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய வீரர்கள் வெல்லும் மூன்றாவது தங்கம் இதுவாகும்.
நீரஜ் சோப்ரா தகுதி சுற்றில் 88.77 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் உள்ளார். இவர் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்துள்ளார்.
2016 உலக யு20 சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48மீ - தங்கம்
2016 தெற்காசிய விளையாட்டு - 82.23 மீ - தங்கம்
2017 ஆசிய சாம்பியன்ஷிப் ஜூனியர் - 85.23 மீ - தங்கம்
2018 காமென்வெல்த் - 86.47 மீ - தங்கம்
2018 ஆசிய விளையாட்டு - 88.06 மீ - தங்கம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் - 87.58மீ - தங்கம்
2022 உலக தடகள சாம்பியன்ஷிப் - 88.39 மீ - வெள்ளி
2022 டைமண்ட் லீக் - 89.94 மீ - தங்கம்
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் - 88.17மீ - தங்கம்