விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு !

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு !

jagadeesh

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சாமுவேல்ஸ், 2018 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ்க்காக கடைசியாக விளையாடினார். 71 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள், 67 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட்டில் 7 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்களும் விளாசியுள்ளார். மொத்தமாக டெஸ்ட்டில் 3917 ரன்கள், ஒருநாள் ஆட்டத்தில் 5606 ரன்கள், டி20யில் 1611 ரன்கள் எடுத்துள்ளார் சாமுவேல்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் வென்ற இரு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இறுதிப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் சாமுவேல்ஸ். 2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். 1979-க்குப் பிறகு அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பையை வென்றது.

மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து, கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து மீண்டும் தனது அணி உலகக் கோப்பையை வெல்ல உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் 152 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் எழுந்த மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளில் சாமுவேல்ஸ் பெயர் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.