விராத் கோலியை நடுவர் அவுட் என்று அறிவித்தது ஆச்சரியம் அளித்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 283 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் விராத் கோலி அபார சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 41 ரன்னுடனும் டிம் பெய்ன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் விராத் கோலி 123 ரன் எடுத்திருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்தார். அது பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற ஹேண்ட்ஸ்கோம்ப் நோக்கி தாழ்வாக சென்றது. அதை பிடித்த அவர், அவுட் என்பது போல் விரலை உயர்த்தியபடி ஓடிவந்தார். சந்தேகம் அடைந்த கோலி நகரவில்லை.
இதையடுத்து நடுவர் தர்மசேனா மூன்றாவது நடுவர் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது கள நடுவர் தனது முடிவை (சாப்ட் சிக்னல்) அவரிடம் சொல்ல வேண்டும். நடுவர் தர்மசேனா அவுட் என்று சாப்ட் சிக்னல் கொடுத்தார். பின்னர் டி.வி. ரீப்ளேயில் ஹேண்ட்ஸ்கோம் பந்தை தரையோடு அள்ளுவது போல் தெளிவாக தெரிந்தது. இருந்தும் கள நடுவர் முடிவுபடி கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியுடன் கோலி திரும்பினார். சர்ச்சைக்குரிய தீர்ப்பை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுபற்றி இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிடம் கேட்டபோது, ‘விராத் கோலியை அவுட் என்று நடுவர் கூறியதும் அதிர்ச்சி அடைந்தோம். வேறு என்ன செய்ய முடியும்? அது முடிந்தது முடிந்ததுதான். அதை விட்டுவிட்டு அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்த விட வேண்டும் என்பதால் அது பற்றி பேசவில்லை. விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தி இருக்கிறார். தொடக்கத்தில் (நேற்று) ஆடுகளம் இருந்த நிலையில் கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனால், கோலி பொறுமையாக நின்று ஆடினார்.
அவர் எப்போதும் ஊக்கம் தரும் கேப்டனாக இருக்கிறார். முன் நின்று வழிநடத்துகிறார். இது அணிக்கு நல்லது. அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் இவ்வாறு செயல்படுவார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம். அப்படி செய்தால், இந்திய அணி சேஸிங் செய்து வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. அதற்கான முயற்சியில் இறங்குகிறோம்’’ என்றார் பும்ரா.