விளையாட்டு

 “தோனி தன் ஓய்வு முடிவை பற்றி எங்களிடம் கூறவில்லை” - கோலி

 “தோனி தன் ஓய்வு முடிவை பற்றி எங்களிடம் கூறவில்லை” - கோலி

webteam

ஓய்வு முடிவு குறித்து இதுவரை எங்களிடம் தோனி எதுவும் கூறவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் நேற்று மழை குறுக்கிட்டதால் இன்று ஆட்டம் தொடரப்பட்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, டெய்லர் (67) மற்றும் வில்லியம்சன்(67) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 239 ரன்களை குவித்தது. 

இதனையடுத்து 240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் தோனி(50) மற்றும் ஜடேஜா(77) சற்று போராடினர். இவர்கள் இருவரும் இறுதியில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 221 ரன்கள் மட்டும் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “முதல் 45 நிமிடங்கள் மிகவும் மோசமாக அமைந்தது. நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினர். சரியான லைன் மற்றும் லென்ந்த்களில் நியூசிலாந்து வீரர்கள் பந்து வீசினர். 

இந்திய வீரர்கள் பேட்டிங்கில் த‌வறு செய்யும் வகையில் அவர்களது பந்து வீச்சு அசத்தலாக இருந்தது. ரோகித் அவுட் ஆன பந்து சிறப்பாக வீசப்பட்ட ஒன்று. நான் ஆட்டமிழந்த பந்தும் நேர்த்தியாக வீசப்பட்டிருந்தது. எனினும் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற தகுதியான அணிதான்” எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து கேட்டபோது அதற்கு கோலி, “தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை” எனக் கூறியுள்ளார்.