விளையாட்டு

நாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி?

நாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி?

webteam

நாளை நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் விராட் கோலி மற்றொரு உலக சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி ரெகார்டுகளை தகர்த்து புதிய சாதனை படைப்பதில் பேர் போனவர். அந்தவகையில் இவர் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையை முறியடித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கடந்த போட்டியில் விராட் கோலி அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 11ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்தார். 

அதேபோல நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 104 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மற்றொரு புதிய உலக சாதனையை அவர் படைப்பார். அத்துடன் மீண்டும் சச்சினின் சாதனையை தகர்ப்பார். 

அதாவது நாளைய போட்டியில் கோலி 104 ரன்கள் அடித்தால் அவர் சர்வேதச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைப்பார். அத்துடன் இந்தச் சாதனையை குறைந்த இன்னிங்ஸில் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார். 

ஏனென்றால் இதற்கு முன்பு 20ஆயிரம் சர்வதேச ரன்களை இந்தியாவின் சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகிய இருவரும் 453ஆவது இன்னிங்ஸில் கடந்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை நாளை கோலி படைக்கும் பட்சத்தில் அவர் 416 இன்னிங்ஸில் 20ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைப்பார். 

இதுவரை விராட் கோலி 131 டெஸ்ட் போட்டி, 222 ஒருநாள் போட்டி, 62 டி20 போட்டி என மொத்தமாக 415 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். அத்துடன் விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டியில் 11020 ரன்கள், டெஸ்ட் போட்டியில் 6613 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 2263 ரன்கள் என மொத்தமாக 19,896 சர்வதேச ரன்களை அடித்துள்ளார். 

ஏற்கெனவே இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), ராகுல் திராவிட்(24,208 ரன்கள்) என இருவரும் 20 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்துள்ளனர். உலகளவில் 11 பேர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.