இலங்கை உடனான போட்டியை வென்று இந்தியா ஆசியகோப்பையின் இறுதி போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். கே.எல்.ராகுல் 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் ரன் கணக்கை துவங்காமலேயே பெவிலியன் திரும்பினார். கடந்த இரண்டு போட்டியில் அரைசதம் அடித்து இருந்ததால் இந்தப் போட்டியிலும் ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை அளித்தார்.
13 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன் எடுத்து வருகிறார். சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். 7.1 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். 11 ஓவர்களில் முடிவில் 91 ரன்கள் எடுத்துள்ளது.
12.2 ஓவரின் போது ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும். ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது இந்திய அணி 12.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்.