விளையாட்டு

“அதிவேக 10 ஆயிரம் ரன்கள்” - விராட் கோலி சாதனை

“அதிவேக 10 ஆயிரம் ரன்கள்” - விராட் கோலி சாதனை

rajakannan

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 10 ஆயிரம் ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி  படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், 81 ரன் எடுத்த போது இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். வெறும் 205 இன்னிங்சில் இந்தச் சாதனையை விராட் கோலி எட்டியுள்ளார். கடைசி ஆயிரம் ரன்களை வெறும் 11 இன்னிங்சில் அவர் அடித்துள்ளார். 

10 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் 13வது வீரராக விராட் கோலி இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, தோனி, ராகுல் டிராவிட் ஆகியோரை தொடர்ந்து தற்போது 5வது வீரராக அவர் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸில் 10 ரன்களை எட்டியதை இதுவரை சாதனையாக இருந்தது. சச்சினின் அந்தச் சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. கடந்தப் போட்டியில் 152 ரன் விளாசிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 29 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், ராயுடுவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராயுடு 80 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 107 ரன் எடுத்து விளையாடி வருகின்றார். இந்திய அணி 45 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்துள்ளது. தோனி 20, பண்ட் 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

விராட் கோலியின் அதிவேகம்:-

(ரன்)
1000 - 24 இன்னிங்ஸ்
2000 - 53 இன்னிங்ஸ்
3000 - 75 இன்னிங்ஸ்
4000 - 93 இன்னிங்ஸ்
5000 - 114 இன்னிங்ஸ்
6000 - 136 இன்னிங்ஸ்
7000 - 161 இன்னிங்ஸ்
8000 - 175 இன்னிங்ஸ்
9000 - 194 இன்னிங்ஸ்
10000 - 205 இன்னிங்ஸ்

அதிக ரன்கள்:-

18426 - சச்சின்
11221 - சவுரவ் கங்குலி
10768 - ராகுல் டிராவிட் 
10,123 - தோனி
10,000 - விராட் கோலி