விளையாட்டு

’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்!

’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இன்று பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு முந்நாள் மற்றும் இந்நாள்  கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

டெல்லிய சேர்ந்தவர், விராத் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான அவர், ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு தொடரிலும் இரண்டு மூன்று சதங்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான்களை மிரள வைக்கிறார். அவர் பல சாதனைகளை உடைப்பார் என்கிறார் கள், பிரையன் லாரா, ஸ்டீவ் வாஹ் உள்ளிட்ட முன்னாள் முன்னணி வீரர்கள். அவரை ஆட்டமிழக்கச் செய்வதுதான் டாப் பந்துவீச்சாளர்க ளுக்கு கனவாக இருக்கிறது. அது சவாலாகவும் இருக்கிறது.

அப்படிப்பட்ட விராத் கோலிக்கு இன்று 30 வயது பிறக்கிறது! படிப்படியாக வளர்ந்தவர்கள் என்பார்களே, அதற்கு உதாரணமாக விராத்தைச் சொல்லலாம். இன்று, அசைக்க முடியாத விராத்தாக இருக்கும் கோலி, ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறிதான் கிரிக்கெட்டில் வென்றிருக்கிறார். அறிமுகப் போட்டிகளில் அவரது ரன்களைப் பார்த்தாலே அது தெரியும்.

அதுபற்றி விவரம்:

2008 ஆம் ஆண்டு, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை வென்ற விராத், ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானது, 2006 ஆண்டு! தமிழகத்துக்கு எதிராக அறிமுகமான இந்த டெல்லி வீரர், 25 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரை, யோ மகேஷ் வீழ்த்தினார். 


ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணியில் 2008 ஆம் ஆண்டு அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் அவர் எடுத்த ரன் 1. அவரை கொல்கத்தா வீரர் அசோக் திண்டா போல்டாக்கினார். அந்த தொடரில் அவர் 13 போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சர்வதேச டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு அறிமுகமான விராத், 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

ஒரு நாள் போட்டியில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான விராத், 22 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரை நுவான் குலசேகரா ஆட்டமிழக்கச் செய்தார். இந்தப் போட்டியில் இந்தியா மோசமாகத் தோற்றது.

டெஸ்ட் போட்டியில், 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமான விராத் எடுத்த ரன்கள், முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 15. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸால் இரண்டு இன்னிங்ஸிலும் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். 

இதெல்லாம் பழைய கதை. இன்று விராத் வேற லெவல். அவர் களத்தில் இறங்கினால், பந்துவீச்சாளர்கள் பதறித்தான் போகிறார்கள். அவரது பேட் எங்கு சுழலும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஏன், கோலிக்கே கூட தெரியாது. ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவர் பேச்சை அவர் பேட்-டே கேட்காது. இதெல்லாம் அவரது தனிப்பட்ட ஆர்வத்தால், கடும் உழைப்பால் கிடைத்த உயர்வு’ என்கிறார்கள் அவருக்கு வேண்டிய வர்கள். 

உழைப்பே உயர்வு.

பிறந்த நாள் வாழ்த்துகள்ஜி!