நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
மிகுந்த பரபரப்புக்கு நடுவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 337 ரன்கள் குவித்துள்ளது. பேர்ஸ்டோவ் 111, ஸ்டோக்ஸ் 79, ராய் 66 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் ஆனார். இதனையடுத்து, ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். கோலி 59 பந்துகளிலும், ரோகித் 65 பந்துகளிலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி பிளங்கட் ஓவரில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோகித் 95 ரன் எடுத்து விளையாடி வருகிறார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக முறையே 82, 77, 67, 72 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் அவர் அரைசதம் அடித்துள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக சதத்தை எட்ட முடியாமல் தவித்து வருகிறார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாகவும், இந்திய அணியின் முதல் கேப்டனாக கோலி தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ளார்.