விளையாட்டு

முரளி விஜய், விஹாரி அரை சதம்: நியூசி. ஏ அணிக்கு எதிரான போட்டி டிரா!

முரளி விஜய், விஹாரி அரை சதம்: நியூசி. ஏ அணிக்கு எதிரான போட்டி டிரா!

webteam

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி, டிராவில் இன்று முடிவடைந்தது.

இந்திய ஏ கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு, ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி  மவுன்ட் மாங்கானுயில் நடந்து வந்தது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிருத்வி ஷா 62 ரன்கள் சேர்த்தார். அவருடன் இறங்கிய முரளி விஜய் 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மயங்க் அகர்வால் 65 ரன்களும் ஹனுமா விஹாரி 86 ரன்களும் சேர்த்தனர். 

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், 94 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விஜய் சங்கர் 62 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹமிஸ் ருதர்போர்ட் அபார சதமடித்தார். அவர் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கிளிவர் 53 ரன்களும் ரான்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.

இந்திய ஏ அணி தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டும், சாஹர், சைனி தலா இரண்டு விக்கெட்டும், சிராஜ், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. இதையடுத்து போட்டி டிரா ஆனது. பிருத்வி ஷா 50 ரன்களும் முரளி விஜய் 60 ரன்களும் விஹாரி 51 ரன்களும் எடுத்தனர்.