விளையாட்டு

காமன்வெல்த்தில் தங்க பதக்கம் வென்ற நெல்லை காய்கறி வியாபாரி

காமன்வெல்த்தில் தங்க பதக்கம் வென்ற நெல்லை காய்கறி வியாபாரி

webteam

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் நெல்லையைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ராமகிருஷ்ணன்.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். 12 வயதில் பளுதூக்குதல் பயிற்சியைத் தொடங்கிய ராமகிருஷ்ணன், 1‌0 ஆண்டுகளாக மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராமகிருஷ்ணன் தொடக்க காலத்தில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். உரிய நிதி கிடைக்காததால், தனது கடைகளில் இருந்த சைக்கிள்களை விற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகியிருந்த ராமகிருஷ்ணன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பளுதூக்குதல் பயிற்சியை தொடங்கினார். காய்கறி கடையையும், அதற்கிடையே பயிற்சியையும் மேற்கொண்ட ராமகிருஷ்ணன், அண்மையில் தென்னாப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்றார். 72 கிலோ எடைப்பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்று, தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார் நெல்லை நாயகன் ராமகிருஷ்ணன்.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டில் நடைபெறும் உலக பளுதூக்கு‌தல் போட்டியிலும் நிச்சயம் சாதிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ராமகிருஷ்ணன். உதவியை தாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், விளையாட்டுத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு அரசின் ஊக்கம் அவசியம் என்று கூறியுள்ளார்.