விளையாட்டு

கடைசி தொடரில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ் - மகள் செய்த கவுரவம்

கடைசி தொடரில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ் - மகள் செய்த கவுரவம்

JustinDurai

அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது நடந்துவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 6 முறை அமெரிக்க ஓபன் சாம்பியனான அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது), இந்த தொடருடன் டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் தனது கடைசி தொடரில் விளையாட இருப்பதால் அவரது போட்டியை காண ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது. செரீனா வில்லியம்ஸின் கணவர் அலெக்சிஸ் ஓஹானியன், மகள் ஒலிம்பியா, தாயார் ஆரசின் பிரைஸ், பில் கிளிண்டன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், முன்னாள் டென்னிஸ் பிரபலங்கள்  உள்ளிட்டோர் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்திற்கு வருகை தந்திருந்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றபோது செரீனா வில்லியம்ஸ் தனது கூந்தலில் வெள்ளை மாலை ஒன்றை அணிந்திருந்தார். அதனை நினைவூட்டும் விதமாக செரீனா வில்லியம்ஸின் மகள் ஒலிம்பியா நேற்று தனது கூந்தலில் வெள்ளை மாலை அணிவித்து தனது தாய்க்கு மரியாதை செய்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கொன்டவீட்டை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ள செரீனா, இந்த தொடரின் இரட்டையர் பிரிவில் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து களமிறங்க ‘வைல்டு கார்டு’சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’விராட் கோலியின் ‘பயோபிக்’ படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ - ஸ்டார் நடிகரின் ஆசை!