விளையாட்டு

அப்பாடி என்னா வேகம்...! இலங்கை கேப்டனை வீழ்த்தி பும்ராவின் சாதனையை தகர்த்த உம்ரான் மாலிக்!

அப்பாடி என்னா வேகம்...! இலங்கை கேப்டனை வீழ்த்தி பும்ராவின் சாதனையை தகர்த்த உம்ரான் மாலிக்!

சங்கீதா

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில், அதிவேகத்தில் பந்துவீசி பும்ராவின் சாதனையை இளம் வீரர் உம்ரான் மாலிக் தகர்த்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் (அறிமுகம்), இஷான் கிஷான் களமிறங்கினார். இதில், சுப்மன் கில் (7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில், மற்றொரும் துவக்க ஆட்டக்காரரான இஷான் கிசான் மட்டும் பொறுமையாக 37 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களும் எடுத்துப் போராடி அவுட்டானார்கள்.

இதன்பிறகு 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிய தீபக் ஹூடோ (41) மற்றும் அக்சர் பட்டேல் (31) கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியும், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிஷாங்கா (1), டீ சில்வா (8), அஸலங்கா (12), ராஜபக்ச (10) என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்தது.

துவக்க ஆட்டக்காரரான குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடினாலும் அவரும் 28 ரன்களில் அவுட்டாக ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்து தடுமாறியது. எனினும், வனிந்து ஹசரங்கா 21 ரன்களை அதிரடியாக குவித்து அவுட்டான போதிலும், மறுபுறம் கேப்டன் தசூன் சனாக்கா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது 17-வது ஓவரின் 4-வது பந்தை உம்ரான் மாலிக் 155 கி.மீ. வேகத்தில் வீச, மற்றுமொரு பவுண்டரியை அடிக்க கேப்டன் தசூன் சனாக்கா முயற்சித்தார். ஆனால் அவரது பேட் சுழற்றிய வேகத்தைவிட பந்துவீச்சின் வேகத்தால், பவுண்டரிக்கு பதிலாக கேட்ச்சாக மாறி நேராக கவர் திசை நோக்கி சென்றநிலையில், அங்கு நின்று கொண்டிருந்த சாஹல் கச்சிதமாக கேட்ச் பிடித்ததால், கேப்டன் தசூன் சனாக்கா அவுட்டானார். எனினும், கடைசி நேரத்தில் சமிகா கருணாரத்னே போராடியும், அக்சர் பட்டேலின் அபார பந்து வீச்சால், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில், 155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக், பும்ராவின் சாதனையை தகர்த்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் பும்ரா 153.36 கி.மீ. வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்த நிலையில், இதனை முறியடித்துள்ளார் உம்ரான் மாலிக். இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வேகம், பும்ரா (மணிக்கு 153.36 கி.மீ.), அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர். இதனால் உம்ரான் மாலிக்கிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.