முதல் ஆசிய அணியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாகும். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 71 ஆண்டுகால தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது.
தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், சிறந்த வேகப்பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் கூறுகையில், “திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி பாராட்டுக்குரியவர். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள கிரிக்கெட் தன்மையை மாற்றும்” என்றார்.
பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், “ஆஸ்திரேலியாவில் முதல் ஆசிய அணியாக டெஸ்ட் தொடரை வென்றதற்காக கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பாராட்டியுள்ளார். ஆசிய அணி ஒன்று ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் இந்திய அடைந்தது மிகப்பெரிய வெற்றி என்றும் மொயின் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மோசின் கான் கூறுகையில், “புஜரா, விராட் கோலி, பண்ட் உள்ளிட்டோரின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பேட்டிங்தான் பந்துவீச்சாளர்களை அழுத்தம் இல்லாமல் செயல்பட வைத்தது” என்றார்.