தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று முதல் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் கோவை - சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் கிராம அளவிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் பட்டம் வென்றன. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நடக்கிறது. கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் சேப்பாக்கத்திலேயே நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் சில அணிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் நுழைகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால் கொரோனா முன்னெனச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்சை சந்திக்கிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட இவ்விரு அணி வீரர்களும் வெற்றியுடன் போட்டியை தொடங்கும் முனைப்பில் உள்ளனர்.