விளையாட்டு

“என் செஞ்சுரியைவிட அவரது அந்த 18 டாட் பந்துகள்தான் முக்கியமானது” - ரிஸ்வானின் பெருந்தன்மை

“என் செஞ்சுரியைவிட அவரது அந்த 18 டாட் பந்துகள்தான் முக்கியமானது” - ரிஸ்வானின் பெருந்தன்மை

சங்கீதா

என்னுடைய சதத்தை விட, விக்கெட் ஆகாமல் கடைசிநேரத்தில் அந்த 18 பந்துகளை எதிர்கொண்டது மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி ஆகியவற்றில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தநிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில், கடந்த 12-ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர், களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி முதல் 148 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 408 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி துவங்கியது. 4-வது நாளில் ஆஸ்திரேலியா சிறிது நேரம் பேட்டிங் செய்து விட்டு 2 விக்கெட்டுக்கு 97 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 171.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிரா செய்தது.

இந்தப் போட்டியின் 4-வது இன்னிங்சில், அதிகப்பட்சமாக துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபிக் 96 ரன்களிலும், கேப்டன் பாபர் அசாம் 196 ரன்களிலும் அவுட்டானார்கள். ஆட்டத்தின் முடிவில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 177 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களுடனும், நௌமன் அலி 18 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இவர்களின் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி சூபாட்டியை டிரா செய்தது. இந்நிலையில், இந்தப் போட்டியின் கடைசி ஓவருக்கு முன்னதாக சதம் அடித்த விக்கெட் கீப்பர் ரிஸ்வான், என்னுடைய சதத்தை விட, விக்கெட் ஆகாமல் கடைசிநேரத்தில் அந்த 18 பந்துகளை நௌமன் அலி எதிர்கொண்டது மிகவும் முக்கியமானது என்று, பாகிஸ்தான் யூ-டியூப் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், "ஒரு டெஸ்டில் வெற்றியடைய நினைக்கும் போது சதம் அடித்ததாலும், வெறும் பூஜ்ஜிய ரன்களே எடுத்தாலும் எல்லாம் ஒன்றுதான். நௌமான் அலி பதினெட்டு பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். அவை எனது சதத்தை விட முக்கியமானவை. எனது சதத்திற்குப் பிறகு நான் அவுட் ஆகியிருந்தால், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது. அவரது கச்சிதமான பேட்டிங் எனக்கு நம்பிக்கை கொடுத்தது" இவ்வாறு தெரிவித்தார்.

ரிஸ்வான் சதமடிக்கும் வரை நௌமன் அலி காத்திருந்ததுடன், விக்கெட் ஏதும் விழாமல் போட்டியை டிரா செய்வதற்காக பந்துகளை தடுத்து ஆடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்தப் போட்டியின் கடைசி இன்னிங்சில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் சதமடித்த 2-வது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கான், டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் சதமடித்திருக்கிறார். அதன்பின்னர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முகமது ரிஸ்வான் தான் அந்த சாதனையை செய்திருக்கிறார். சர்வதேச அளவில், டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் சதமடித்த 7-வது விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஆவார். இதற்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட், ஏபி டிவில்லியர்ஸ், ரிஷப் பந்த், ஆலன் நாட், மேட் பிரையர், மொயின் கான் ஆகிய 6 விக்கெட் கீப்பர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.