விளையாட்டு

துணைக் கேப்டனான பிறகு ”அப்பா அனுப்பிய குறுஞ்செய்தி”! - சுவாரசியம் பகிர்ந்த சூர்யகுமார்!

துணைக் கேப்டனான பிறகு ”அப்பா அனுப்பிய குறுஞ்செய்தி”! - சுவாரசியம் பகிர்ந்த சூர்யகுமார்!

Rishan Vengai

எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது தந்தை அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து அவர் சுவாரசியம் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாட உள்ளது. இதில் முதலில் விளையாடவிருக்கும் டி20 தொடர் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை அறிவித்த பிசிசிஐ, டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தும், சமீப காலமாக சிறப்பான பேட்டிங் திறமையை வெளிக்காட்டி வரும் சூரியகுமார் யாதவை துணை கேப்டனாக நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டது கவனத்தை பெற்றது.

மேலும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர்ந்தாலும், துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்து, அனைத்து வடிவத்திற்குமான அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாதான் என்ற நகர்வை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளது.

30 வயதில் தான் முதல் வாய்ப்பு!

முதல் தரப் போட்டிகளில் 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் சூர்யகுமார், 5416 ரன்கள் குவித்து 46 சராசரியுடன் 14 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்திருக்கிறார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 108 இன்னிங்களில் 3 சதங்கள், 19 அரைசதங்களுடன் 3238 ரன்கள் குவித்திருக்கிறார்.

மற்றும் உள்ளூர் டி20 வடிவங்களில் அவர் சிறந்த ஸ்கோரை கொண்டுள்ளார், 214 இன்னிங்ஸ்களில் 5631 ரன்கள் குவித்திருக்கும் அவர், 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 2 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

என்னதான் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்ற அவருடைய கனவு, அவருடைய சிக்சர் போல் தூக்கி அடிக்கப்பட்டுகொண்டே இருந்தது. பலமுறை அவர் தேர்வாளர்களின் மூளைக் கதவை தட்டியபோதும், அது திறக்கப்படவே இல்லை.

பல வருடங்கள் நிகழ்த்தப்பட்ட அவருடைய போராட்டம் ஒரு வழியாக 30-31 வயதில் தான் முடிவுக்கு வந்தது. மார்ச் 14, 2021?ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார் சூரியகுமார் யாதவ். அதற்குப்பிறகு அவர் குறுகிய நேரத்தில் ஒரு குட்டி சகாப்தத்தையே நிகழ்த்தி காட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சூரியகுமாருக்கு அற்புதமாக அமைந்த 2021-2022!

இந்திய அணிக்காக 40 டி20 போட்டிகளில் 44 சராசரியுடன், 2 டி20 சதங்கள் மற்றும் 12 அரைசங்களுடன் 1408 சேர்த்துள்ளார். டி20களில் அவருடைய பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 180 ஆகும். மேலும் குறுகிய ஆட்டங்களிலேயே 2 டி20 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய விதம், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜொஸ் பட்லராலயே இப்படி ஒரு இன்னிங்ஸை பார்த்ததில்லை என மிகைப்படுத்தப்பட்டது.

மேலும் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நியூசிலாந்து மண்ணிலேயே மீண்டும் ஒரு அற்புதமான 100ஐ நிகழ்த்தி காட்டினார் சூரியகுமார் யாதவ். அதுமட்டுமில்லாமல் விராட் கோலிக்கு பிறகு டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சூரியகுமார் யாதவ் தான் இருந்தார். சூரியகுமார் யாதவிற்கு அற்புதமான வருடமாக முடிவுக்கு வந்துள்ளது 2021-2022. மற்றும் அடுத்த பொறுப்புகளோடு மிக முக்கிய வருடமாக மாறியுள்ளது 2023.

துணை கேப்டன் நியமிக்கப்பட்டது குறித்து பேசிய சூர்யா!

இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியிருந்த சூரியகுமார் யாதவ், இதை என்னால் நம்பமுடியவில்லை, கனவுபோல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அவர் பேசியதில், "நான் இதை எதிர்பார்க்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் எனது சிறப்பான விளையாட்டை வைத்துதான் எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது என்று என்னால் சொல்ல முடியும். உண்மையில் துணைக் கேப்டன் குறித்து நான் நன்றாகவே உணர்கிறேன், இந்தப் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தந்தை தனக்கு இந்த குறுஞ்செய்தி தான் அனுப்பினார்!

தனது தந்தை உடனான உரையாடல் குறித்து பேசியிருக்கும் சூரியகுமார் யாதவ், ” என் தந்தை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார், நான் துணைக் கேப்டன் என்பதை என் தந்தையிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன். அவர் எனக்கு அணியை அனுப்பினார், மேலும் எனக்கு ஒரு சிறிய அறிவுரையும் கொடுத்தார்”

அவர் கொடுத்த அறிவுரை என்னவென்றால், “எந்த நிலையிலும் அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம், உனது பேட்டிங்கில் முழு கவனமும் செலுத்தி சிறப்பாக விளையாடு” என்று கூறியிருந்தார்.

கண்களை மூடிக்கொண்டு என்னையே கேட்டுக் கொண்டேன்!

”சில கணங்கள் கண்களை மூடிக்கொண்டு இது கனவா என்று என்னையே கேட்டுக்கொண்டேன். இது ஒரு சிறந்த உணர்வு” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் விளையாட விரும்புகிறேன்!

ஹர்திக் பாண்டியா குறித்து பேசியிருக்கும் சூரியகுமார் யாதவ், “எங்கள் இருவருக்குமிடையேயான உறவு எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது. இந்தியா மற்றும் எம்ஐக்காக நாங்கள் நிறைய சேர்ந்து விளையாடியுள்ளோம். எங்கள் பேட்டிங் எண்களும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன. நாங்கள் ஒன்றாக நிறைய பேட்டிங் செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து செயல்படுகிறோம். ஐபிஎல் மற்றும் சமீபத்தில் இந்தியாவை வழிநடத்தும் போது அவர் ஒரு அற்புதமான தலைவராக இருந்தார். எனவே, அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்” என்றார்.