இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை சற்றே ஆராயலாம்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது.
கடைசியாக 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன் பின்பு தோனி மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இங்கிலாந்தில் தோல்வியையே மிஞ்சியிருக்கிறது. 2007 க்கு முன்பு, 1986 இல் கபில் தேவ் தலைமையிலும், 1971 இல் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி சாதனையை நிகழ்த்த நாளை களம் காண்கிறது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதால் இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. 2014, 2018 இல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி வேறு இப்போதிருக்கும் இந்திய அணி வேறு என்று விமர்சகர்கள் கூறியிருந்தாலும் இங்கிலாந்தில் சவால்கள் நிறைந்தே இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியா தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது.
இன்னொரு தொடக்க வீரர் யார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர் யார் என்ற சிக்கலுடனே தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் தொடக்க டெஸ்ட் வீரர்களாக இருந்தவர்கள் சுப்மன் கில் மற்றும் மயாங்க் அகர்வால். இவர்களில் யாரேனும் ஒருவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி வந்தனர். ஆனால் இப்போது இவர்கள் இருவரும் காயமடைந்துள்ளதால் மற்றொரு தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்ற தீவிர ஆலோசனையில் இந்திய அணி இருக்கிறது.
இந்தியாவின் முன்பு கே.எல்.ராகுல், பிருத்வி ஷா மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் மூவரில் ஒருவருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதில் கே.எல்.ராகுல்தான் இந்திய அணிக்கு முதல் சாய்ஸாக இருப்பார் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே அவர் நடைபெற்ற பயிற்சி போட்டியில் சதம் விளாசியிருந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இலங்கை தொடரில் பிருத்வி ஷா சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் அனுபவம் கேஎல் ராகுலுக்கு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களா? கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களா?
இங்கிலாந்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவுடன் இந்தியா களமிறங்குமா அல்லது கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குமா என்ற குழப்பமும் இந்திய அணிக்கு இருக்கிறது. இங்கிலாந்தின் ஆடுகளம் எப்போதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என இந்தியா களமிறங்க வேண்டும் என்பதே விமர்சகர்களின் நிலைப்பாடு. அதில் அஸ்வினுக்கு எப்போதும் அணியில் இடமுண்டு என்றாலும் ஜடேஜாவின் இடம்தான் இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஜடேஜா பேட்டிங்கிலும் வல்லவர் என்பதால் கோலியின் முதல் சாய்ஸாக அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குரை சேர்த்தால் வேகப்பந்துவீச்சுக்கும் பேட்டிங்கும் சரியாக இருக்கும் என்பது பலரின் நிலைப்பாடு. அதேபோல பும்ரா, முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளர்கள். இதில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இளம் வீரரான முகமது சிராஜை சேர்க்கலாமா அல்லது அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மாவை சேர்க்கலாமா என்ற குழப்பமும் இந்திய அணிக்கு இருக்கிறது.
இங்கிலாந்தின் சூழ்நிலை
இங்கிலாந்தின் காலநிலை சூழல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா சூழலை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இங்கிலாந்தின் வானிலை சூழல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் ஆடுகளத்தில் தன்மையும் மாறும். அதற்கேற்ப வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது வியூகங்களை வகுக்க வேண்டும். சவுத்தாம்டனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களால் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் அவர்களால் நீடித்து நின்று விளையாட முடியாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், இந்திய அணியின் கடந்த ஒரு மாத காலமாக இங்கிலாந்தில் தங்கி இருப்பதால் அந்த பருவநிலை அவர்களுக்கு ஒத்துப்போயிருக்க வாய்ப்புள்ளது.
இதையெல்லாம் சரி செய்தால் ரன்களை போதிய அளவுக்கு குவித்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதே நிஜம்.