விளையாட்டு

லார்ட்ஸ் மைதானமும்... இந்திய அணியின் 36 ஆண்டு கால கனவும்

லார்ட்ஸ் மைதானமும்... இந்திய அணியின் 36 ஆண்டு கால கனவும்

webteam

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை ஏந்தும் வேட்கையுடன் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.

1983 ஆம் ஆண்டு 3 ஆவது உலகக்கோப்பை, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்முனையில் இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்பதே பெருவாரியான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அப்போது கபில்தேவ் தலைமையில் களம் கண்டது இந்திய அணி, 50 ஓவர்களை கொண்ட போட்டியாக இல்லாமல் 60 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று அப்போது இருந்தது. அனல் பறக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட இந்திய அணி 183 ரன்களுக்கு பின் ஆட்டமிழந்தது. பனை மரத்தின் பாதியளவு போன்று தோற்றமளிக்கும் ஆண்டி ராபர்ட்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கெல் ஹோல்டிங் ஆகியோரும் தங்கள் பங்குக்கு விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்கள் எடுத்தார். இலக்கை எளிதாக வெஸ்ட் இண்டீஸ் எட்டி விடும் என்ற கணிப்பே மேலோங்கி நிற்க, கார்டன் க்ரினிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், லாரி கோம்ஸ் ஆகிய ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 140 ரன்களுக்கு வாரிச்சுருட்டியது இந்திய அணி. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிக் கோப்பையை ஏந்தினார் கபில் தேவ்.

கபில் தேவ் குழு சாதித்ததற்குப் பிறகு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனது. சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான அணி கோப்பையை ஏந்தியது. தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் குழுவினரின் கையில் பிரகாசித்த உலகக்கோப்பையை தற்போது கோலி அண்ட் கோ ஏந்துமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.