விளையாட்டு

”நாங்கள் திருந்திவிட்டோம்” ஐபிஎல்,டி20 மோகத்தால் அழிவை நோக்கி செல்கிறதா டெஸ்ட் கிரிக்கெட்!

”நாங்கள் திருந்திவிட்டோம்” ஐபிஎல்,டி20 மோகத்தால் அழிவை நோக்கி செல்கிறதா டெஸ்ட் கிரிக்கெட்!

Rishan Vengai

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் என்றால், அது டெஸ்ட் கிரிக்கெட் வடிவமாக தான் இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் டெஸ்ட் போட்டிக்கான அவர்களுடைய நாட்டின் சொந்த அணியில் விளையாட தான் பெரிதும் விருப்பம் காட்டுவார்கள். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் ஒரு வீரர், முழுமையான கிரிக்கெட் வீரராக பார்க்கப்படுவார். ஆனால், தற்போது கிரிக்கெட்ட வடிவத்தின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது இளைஞர்களுக்கு பெரிதும் ஈர்ப்பு இருக்கிறதா? என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவு குறுகிய வடிவ போட்டிகள் உலக கிரிக்கெட்டில் பெருகிகொண்டே வருகின்றன.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல உலக டெஸ்ட் கிரிக்கெட் அழிவிற்கும் தொடக்க புள்ளி ஐபிஎல் தொடர் தான்!

நியாபகம் வைத்துகொள்ளுங்கள் இந்திய அணி தன்னுடைய முதல் டி20 உலகக்கோப்பையை 2007ஆம் ஆண்டு மட்டும் தான் வெற்றிபெற்றது. அதற்குபிறகு இந்தியாவில் டி20 வடிவத்தில் இந்தியாவை இன்னும் முன்னேற்றவும், நாடு முழுவதுமுள்ள இளைஞர்களின் வாய்ப்பு கதவை திறக்கும் விதமாகவும் தான் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் உலகின் பணக்கார டி20 தொடர் என்ற பெயர் பெற்றதே தவிர, சிறந்த டி20 லீக் என சொல்லப்படும் ஐபிஎல் தொடர் வந்ததிற்கு பிறகு இந்தியா எத்தனை டி20 உலகக்கோப்பையை வென்றது என்று பார்த்தால், அதன் எண்ணிக்கை 0 ஆக மட்டும் தான் இருந்து வருகிறது.

முழுக்க முழுக்க பணம், வணிகம் என்ற கோணத்திலேயே பார்க்கப்படும் ஒரு பெரிய தொடராக மட்டுமே ஐபிஎல் தொடர் இருந்துவருகிறது. ஏனென்றால் உலக அரங்கில் இருக்கும் டி20 தொடர்களை ஒப்பிடும் போது, இந்தியாவின் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் விளையாடப்படுகின்றன. மொத்தமாய் ஒரு அணி 14 போட்டிகள் வீதம் மொத்தமாக 74 போட்டிகள் விளையாடப்படுகிறது. தற்போது கூடுதலாக அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இன்னும் 10 போட்டிகள் கூடுதலாக எதிர்காலத்தில் விளையாடப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

ஐபிஎல் தாக்கத்தால் தான் டி20, டி10 மற்றும் 100 பந்துகள் கொண்ட குறுகிய வடிவ தொடர்கள், உலகம் முழுக்கவும் புதிது புதிதாக தொடங்கப்பட்டும், நடத்தப்பட்டும் வருகின்றன. அதற்கு மூல காரணமாக ஐபிஎல் தான் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நீங்கள் இப்போது இந்தியாவுக்குச் செல்லுங்களேன், அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எல்லாம் விரும்பி பார்க்கவே மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாமே இப்போது ஐபிஎல்-ஆக மாறிவிட்டது. அதன்மூலம் அவர்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கிறார்கள். உண்மை தான், ஐபிஎல் இப்போது நன்றாக இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது 100 ஆண்டுகளை கடந்து இருந்து வருகிறது. அது எங்கும் ஓடிப்போவதற்கு வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், ” ஐபிஎல் போட்டிகளில் அதிக வருமானம் கிடைப்பதால் எல்லோரும் அதில் விளையாட விரும்புகிறார்கள். உண்மை தான் ஒரு வருடம் முழுக்க உழைத்து கிடைக்கும் சம்பளம், 2 மாதங்களில் கிடைக்கிறது என்றால் வீரர்கள் அங்கு தான் செல்வார்கள். ஆனால் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டை இழந்தால், மொத்தமாக கிரிக்கெட்டையே இழக்க நேரும் காலம் வந்துவிடும். நாங்கள் திருந்திவிட்டோம், எங்கள் நாட்டில் இன்னும் டெஸ்ட் போட்டிக்கான முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருந்துவருகிறது. இந்தியாவும் மாறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ” உலகம் முழுவதும் டி20 லீக்குகளில் விளையாடத்தான் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் கடந்தால் டெஸ்ட் கிரிக்கெட் என்னாகும் என்று எனக்கு கவலையாக இருக்கிறது. உங்கள் கிரிக்கெட் திறமையை பரிசோதித்துக்கொள்ள டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவேண்டியது அவசியம்” என்று கூறியிருந்தார்.

ஐபிஎல் தொடரால் இந்தியாவில் இழந்து வரும் டெஸ்ட் முக்கியத்துவம்!

ரஞ்சிக்கோப்பை: ரஞ்சிக்கோப்பை எனப்படும் முதல்தர டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களே, இந்தியாவின் டெஸ்ட் அணிக்காக விளையாடும் வீரர்களில் முதன்மையான வீரர்களாக இருந்துவந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் அந்த முக்கியத்துவம் பறிபோய்விட்டதற்கான, விசயங்கள் நிறைய நடந்து கொண்டிருக்கின்றன.

சர்பராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் தொடங்கி ஜெயதேவ் உனாத்கட், முரளி விஜய், மற்றும் அம்பத்தி ராயுடு வரை பல வீரர்கள் காத்திருந்து ஓய்வையே அளித்திருக்கும் சம்பவங்களும் அரங்கேறிகொண்டு தான் இருக்கின்றன.

அடுத்த தலைமுறை வீரர்கள்: இந்திய அணியில் பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என ஒரு சீனியர் பட்டாளமே தங்களது ஓய்வு வயதை நெருங்கி கொண்டிருக்கின்றனர். புஜாரா, ரோகித் சர்மா, ரவி அஸ்வின், முகமது ஷமி முதலிய பல வீரர்கள் தங்களது குறுகிய கால கிரிக்கெட் எதிர்காலத்தையே வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனரா என்றால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு: காலம் காலமாக இந்திய மண்ணில் மற்ற உலக அணிகள் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத நிலை இருக்கிறதென்றால், அதற்கு இந்திய அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சே காரணமாக இருந்து வருகிறது. ஆனால் ரவி அஸ்வின், ஜடேஜாவிற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கான சுழற்பந்துவீச்சாளரை, இன்னும் இந்திய அணி கண்டுபிடிக்காமலே இருந்துவருகிறது.

முத்தரப்பு தொடர்கள்: தற்போது ஐபிஎல் நடத்தப்படும் காலங்களில், முன்னதாக 3 நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போன்ற தொடர்கள் வந்ததற்கு பிறகு முத்தரப்பு தொடர்களும் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

விராட் கோலி, ரோகித் சர்மா, ரவி அஸ்வின் முதலிய ஜாம்பவான் வீரர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பாக, இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கிவிட்டு செல்லும் பொறுப்பில் செயல்படவேண்டும், பிசிசிஐ அதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.