Coco Gauff Frank Franklin II
டென்னிஸ்

US OPEN | கோகோ காஃப் - அமெரிக்க டென்னிஸின் எதிர்காலம் இதோ..!

அமெரிக்கக் கொடியை மீண்டும் தூக்கிப் பிடிக்கக் கூடிய ஒரு ஹீரோவுக்காக அமெரிக்கர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இப்போது 19 வயது கோகோ காஃப் மூலம் அந்த நாட்டுக்கு ஒரு சூப்பர் ஹீரோ கிடைத்திருக்கிறார்!

Viyan

2023 அமெரிக்க ஓப்பன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப். 19 வயதேயான காஃப், ஃபைனலில் அரீனா சபலென்காவை வீழ்த்தி தன் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார். அவருடைய முதல் கிராண்ட் ஸ்லாம் என்பதைக் கடந்து, டென்னிஸ் அரங்கில் அமெரிக்கக் கொடியை மீண்டும் பறக்கவிடும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் இந்த இளம் சூப்பர் ஸ்டார்.

Coco Gauff | Aryna Sabalenka

அமெரிக்க டென்னிஸ் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் வீழ்ச்சியைக் கண்டுவந்தது. பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள் கிராண்ட் ஸ்லாம் அரங்கில் தடுமாறத் தொடங்கினார்கள். ஆண்கள் பிரிவில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோரின் எழுச்சியின் காரணமாக அமெரிக்க வீர்ர்களால் எந்தப் பட்டமும் வெல்ல முடியவில்லை. கடைசியாக 2003 அமெரிக்க ஓப்பனை ஆண்டி ரோடிக் வென்றது தான். அதன் பிறகு 20 ஆண்டுகளாக எந்த அமெரிக்க வீரரும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு அருகில் வரவேயில்லை.

பெண்கள் பிரிவிலும் அமெரிக்க வீராங்கனைகள் சமீப காலமாகப் பின்தங்கவே செய்தனர். வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பிறகு வேறு யாராலும் பெரிய வெற்றிகள் பெற முடியவில்லை. செரீனா வில்லியம்ஸ் தன் கடைசி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 2017 ஆஸ்திரேலிய ஓப்பனில் வென்றார். அதன்பிறகு இந்த 6 ஆண்டுகளில் இரண்டு அமெரிக்க வீராங்கனைகள் மட்டும் தலா 1 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றர். 2017 அமெரிக்க ஓப்பனை ஸ்லோன் ஸ்டீஃபன்ஸும், 2020 ஆஸ்திரேலிய ஓப்பனை சோஃபியா கெனினும் வென்றனர். இந்த 6 ஆண்டுகளில் மொத்தம் இரண்டே கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் தான்.

Coco Gauff

செரீனா, வீனஸ், பில்லி ஜீன் கிங், பீட் சாம்ப்ரஸ், ஆண்ட்ரே அகாஸி என டென்னிஸ் உலகை அமெரிக்கர்கள் கட்டி ஆண்டுகொண்டிருந்தனர். ஆனால் இந்த 20 ஆண்டுகளாக ஐரோப்பிய வீரர், வீராங்கனைகளின் எழுச்சிக்கு முன் அமெரிக்க டென்னிஸ் வெகுவாகப் பின்தங்கிவிட்டது. அமெரிக்கக் கொடியை மீண்டும் தூக்கிப் பிடிக்கக் கூடிய ஒரு ஹீரோவுக்காக அமெரிக்கர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இப்போது 19 வயது கோகோ காஃப் மூலம் அந்த நாட்டுக்கு ஒரு சூப்பர் ஹீரோ கிடைத்திருக்கிறார்!

2018ம் ஆண்டு தன் 15 வயதில் தொழில்முறை கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார் கோகோ. 2018 அமெரிக்க ஓப்பனின் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியிருந்தாலும், விரைவிலேயே முன்னேற்றம் காணத் தொடங்கினார் அவர். 2019 விம்பிள்டன் தொடரில் நான்காவது சுற்றுக்கும், அமெரிக்க ஓப்பனில் மூன்றாவது சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார். 2021 பிரெஞ்சு ஓப்பனில் காலிறுதி வரை சென்றவர், 2022 ரோலண்ட் காரோஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தினார். அந்த இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக்கிடம் தோற்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார் அவர். இருந்தாலும் அவர் ஓயவே இல்லை.

இந்த அமெரிக்க ஓப்பனுக்கு முன்பாக மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார் காஃப். சின்சினாட்டி ஓப்பன் பட்டம் வென்று அமெரிக்க ஓப்பனுக்குள் நுழைந்தவர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். இறுதிப் போட்டியின் முதல் செட்டை இழந்திருந்தாலும், அதன்பிறகு மிகச் சிறந்த கம்பேக்கை அரங்கேற்றி அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.

மற்ற வீராங்கனைகளைப் போல் காஃப் ஒற்றையர் பிரிவில் மட்டும் விளையாடுவதில்லை. பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதனால் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போட்டிகளில் பங்கேற்கும் நிலை ஏற்படும். இருந்தாலும் தன் ஃபிட்னஸை சிறப்பாகக் கையாளும் அவர், ஒவ்வொரு போட்டியையும் புத்துணர்ச்சியோடு அணுகுகிறார். வில்லியம்ஸ் சகோதரிகளின் டென்னிஸ் கரியர் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ, இவரது கரியரும் அப்படித்தான் தொடங்கியிருக்கிறது. "செரீனா மற்றும் வீனஸ் ஆகியோரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்" என்று அவரும் வில்லியம்ஸ் சகோதரிகளின் தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். அதனாலேயே அவரை அடுத்த செரீனா என்று கொண்டாடத் தொடங்கியிருக்கிறது அமெரிக்க கிரிக்கெட் வட்டாரம்.

ஆட்டம், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றில் செரீனாவைப் போல் இருக்கும் காஃப், பத்திரிகையாளர்களுடன் பேசும்போது தன் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார். காலிறுதியில் காஃபுக்கு எதிராக தோற்ற கரோலினா மூசோவா, "காஃப் தன் முந்தைய போட்டியை பகலில் விளையாடினார். நான் முந்தைய போட்டியை இரவு நேரம் ஆடினேன். இந்தப் போட்டி இரவு இருக்கும் என்று நினத்தேன். ஆனால் பகலில் வைத்தது எனக்குப் போதுமான நேரம் கொடுக்கவில்லை" என்று கூறினார். இதுபற்றி பத்திரிகையாளர்கள் காஃபிடம் கேட்டனர். தான் இடைவெளியே இல்லாமல் இரட்டையர் பிரிவில் விளையாடுவதைக் குறிப்பிட்டு அவர் காட்டமாக பதில் கூறியிருக்கலாம். ஆனால், "அது மிகவும் கடினமான விஷயம். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் உணர்ந்திருப்பேன்" என்று அழகாக பதிலளித்தார் . வெளிப்படையாகவும், அதேசமயம் மிகவும் தன்மையாகவும் பேசுகிறார். மைதானத்தில், தனக்கு அடுத்த போட்டியை விளையாடிய ஜோகோவிச்சை இவரே மைக்கில் வரவேற்று தன் கலகலப்பான பக்கத்தையும் காட்டுகிறார். ஆக, அடுத்த தலைமுறையை ஈர்க்கக் கூடிய, அவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கக்கூடிய ஒரு முழுமையான பேக்கேஜாக இருக்கிறார் கோகோ காஃப்.

இதே ஃபார்மை அவர் அடுத்த ஆண்டும் தொடரும்பட்சத்தில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓரிரு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்லும்பட்சத்தில் நிச்சயம் செரீனா, வீனஸ் போன்றவர்கள் அடைந்த உயரத்தை இவராலும் அடைய முடியும்!