Roger Federer @usopen | Twitter
விளையாட்டு

சாம்பியன், ஜாம்பவான், கடவுள்! ஹேப்பி பர்த்டே ரோஜர் ஃபெடரர்

டென்னிஸ் உலகின் மகத்தான வீரரான, 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஜாம்பவானும், டென்னிஸ் அரங்கின் கடவுளாக கருதப்படுபவருமான ரோஜர் ஃபெடரரின் பிறந்த நாள் இன்று.

Viyan

ஃபெடரரின் தொடக்கம்

1981 ஆகஸ்ட் 8ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார் ரோஜர். சிறு வயதிலேயே டென்னிஸ் மீது காதல் கொண்ட ஃபெடரர் பேட்மின்டன், பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். 1996ம் ஆண்டு தன் 14வது வயது முதல் ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டார் ஃபெடரர். 1998 விம்பிள்டனில் சிறுவர்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றார். அந்த ஆண்டு முடிவில் ஜூனியர் பிரிவில் நம்பர் 1 வீரராக மகுடம் சூடிய அவர், தொழில்முறை டென்னிஸ் அரங்கிலும் கால் பதித்தார்.

1999ம் ஆண்டு சர்வதேச ATP ரேங்கிங்கில் டாப் 100 இடங்களுக்குள் நுழைந்த அவர், 2001 ஃபிரெஞ்சு ஓப்பன் முடிவில் டாப் 15 இடங்களுக்குள் நுழைந்தார். 2001 விம்பிள்டன் நான்காவது சுற்றுப் போட்டியில் பீட் சாம்ப்ரஸை எதிர்கொண்டார் ஃபெடரர். அப்போது நம்பர் 1 வீரராகவும், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவராகவும் விளங்கினார் சாம்ப்ரஸ். ஃபெடரரோ 19 வயது இளைஞர். ஆனால், சாம்ப்ரஸை வீழ்த்தி, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் ஃபெடரர். அதன்பின், அடுத்த 21 ஆண்டுகள் அவர் ஓய்வு பெறும் வரை எந்த விழிகளும் அவரிடமிருந்து விலகவில்லை.

ஸ்டைலிஷ் மன்னன்

தன் அட்டகாசமான ஸ்டைலான ஆட்டத்தால் ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டிப் போட்டிருந்தார் ஃபெடரர். அவருடைய வெற்றிகள், ரேங்கிங் ஆதிக்கம் போன்றவற்றையெல்லாம் தாண்டி அவருடைய கேம் ஸ்டைலுக்காகவே எல்லோரும் அவரைக் கொண்டாடினார்கள். அவருடைய ஷாட்கள் ஓவியங்களுக்கு இணையாக வர்ணிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அவர் களத்தில் நடந்துகொண்ட விதமும் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. எந்தவொரு சமயத்திலும் தன்னிலை வழுவாமல் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட அவர், ஒவ்வொரு இளம் டென்னிஸ் வீரருக்கும், ஏன் டென்னிஸ் விளையாடாதவர்களுக்கும் கூட ரோல் மாடலாகக் கூறப்பட்டார்.

தன்னுடைய டென்னிஸ் ரைவலான ரஃபேல் நடாலுடன் அவர் கொண்டிருந்த உறவும் அவர் மீதான மதிப்பை அதிகரித்தது. களத்தில் இருவரும் இருவேறு துருவங்களாக இருந்தனர். ஒவ்வொரு பட்டத்துக்கும் யுத்தம் நிகழ்த்தினர். ஆனால் களத்துக்கு வெளியே அவர்கள் நட்பு பாராட்டியது எப்படி சாத்தியம் என்று அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு ஜென்டில் மேனாக திகழ்ந்தவர் ஃபெடரர்.

மறக்க முடியாத மனிதன்

பல்வேறு பட்டங்கள், மகுடங்கள், இதயங்கள் என அனைத்தையும் வென்ற பிறகு 2022 லேவர் கப்போடு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார் அவர். அவருடைய பல சாதனைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் மிச்சமும் உடைக்கப்படலாம். ஆனால், ரோஜர் ஃபெடரர் களத்தில் நிகழ்த்திய மாயங்கள், அவர் அந்தக் களத்தில் காட்டிய கேரக்டர் என்றும் மறையாது. யாராலும் மறக்க முடியாதது.

ஃபெடரர் வென்ற கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்:

ஆஸ்திரேலியன் ஓப்பன் - 6

ஃபிரெஞ்சு ஓப்பன் - 1

விம்பிள்டன் - 8

அமெரிக்கன் ஓப்பன் - 5

டென்னிஸில் செய்த சாதனைகள்

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் ஃபெடரர், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஜோகோவிச் (23), நடால் (22) முதலிரு இடங்களில் இருக்கிறார்கள். 8 பட்டங்களோடு அதிக முறை விம்பிள்டன் வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஃபெடரர். 2003 முதல் 2007 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் விம்பிள்டன் பட்டம் வென்றார் அவர். அதேபோல் 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 முறை அமெரிக்கன் ஓப்பன் சாம்பியனாகவும் மகுடம் சூடினார்.

கிராண்ட் ஸ்லாம் ஃபைனல்கள் - 31

வெற்றிகள் - 20

தோல்விகள் - 11

வெற்றி சதவிகிதம் - 64.52%

தன் முதல் 7 கிராண்ட் ஸ்லாம் ஃபைனல்களையும் வென்ற ஃபெடரர், தன் முதல் ஃபிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் நடாலுக்கு எதிராகத் தோல்வியடைந்தார். அதன்பிறகு தொடர்ந்து 3 ஃபிரெஞ்சு ஓப்பன் பைனல்களில் தோற்றார் அவர். அவருடைய 11 கிராண்ட் ஸ்லாம் ஃபைனல் தோல்விகளில் ஆறு நடாலுக்கு எதிராக வந்தவை. ஜோகோவிச்சுக்கு எதிரான 4 முறையும், யுவான் மார்டின் டெல் போர்டோவுக்கு எதிராக ஒரு முறையும் தோற்றிருக்கிறார் அவர்.

ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்த முடிவு

வெற்றிகள் - 1251

தோல்விகள் - 275

வெற்றி சதவிகிதம் - 82.0%

6 முறை ஆண்டு இறுதி ATP டூர் ஃபைனல்ஸை வென்ற ஃபெடரர், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியடைந்தார் அவர்.

நம்பர் 1:

2004 ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்று முதல் முறையாக நம்பர் 1 அரியணையில் அமர்ந்தார் ஃபெடரர். அதே ஆஸ்திரேலியன் ஓப்பன் பட்டத்தை 2018ம் ஆண்டு வென்று நம்பர் 1 அரியணையில் அவர் அமர்ந்தபோது, அதிக வயதில் (36) நம்பர் 1 அரியணை ஏறியவர் என்ற சாதனையும் படைத்தார். பிப்ரவரி 2, 2004 முதல் ஆகஸ்ட் 17, 2008 வரை தொடர்ந்து 302 வாரங்கள் டென்னிஸ் அரங்கில் அசைக்க முடியாத நம்பர் 1 வீரராக அமர்ந்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார் ஃபெடரர்.