இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டின் சீனியர் வீரர்களில் ஒருவர் ஷரத் கமல். இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட உள்ளார். நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார் அவர்.
ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வென்ற வெள்ளிப்பதக்கம் எப்படி பலரையும் பேட்மிண்டன் பக்கமாக தொழில்முறை ரீதியாக திரும்ப செய்ததோ அது போல தனது விளையாட்டின் மீதும் பெருந்திரளான மக்களின் பார்வையை திருப்புவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
யார் இவர்?
38 வயதான ஷரத் கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான ரேங்கிங் தரவரிசையில் 32வது இடத்தில் இருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 2004, 2008 மற்றும் 2016 என மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். தற்போது நான்காவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட உள்ளார்.
தேசிய அளவில் அசத்திய அவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களையும் வென்றுள்ளார். ஆனால் அவருக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவு மட்டுமே ஏனோ இன்னும் கைகூடாமல் உள்ளது. அடுத்த சில நாட்களில் அந்த கனவை மெய்பிக்க காத்துள்ளார்.
வீழ்ச்சியே வெற்றிக்கு வித்திடும்!
22 வயதில் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவர் ஷரத் கமல். ஏதென்ஸ் நகரில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி, இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கிலும் இதே நிலை.
அதன் பின்னர் 2011இல் அவரது விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இறங்குமுகம் கண்டார்.
“தொடர் தோல்விகளை சந்தித்த நேரம் அது. வீழ்ச்சியே வெற்றிக்கான அடித்தளமாக அமையும். அப்போது எனக்கு இனியும் நாம் விளையாட வேண்டுமா? என்ற கேள்வி கூட எழுந்திருந்தது. 30 வயதை நான் நெருங்கி இருந்தேன்” என அந்த சமயத்தில் சொல்லி இருந்தார் ஷரத்.
அவர் சொன்னதை போல மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார். தனது ஆட்டத்தில் சில டெக்னிக்குகளை மாற்றி இளம் வீரர்களுக்கு டஃப் கொடுத்தார். அதன் மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கில் விளையாடினார். இந்த முறை முதல் சுற்றோடு வெளியேறினார்.
கனவு பதக்கத்தை நெருங்குவேன்!
“ஒட்டுமொத்த உலகமும் ஒலிம்பிக் குறித்துதான் பேசி வருகிறது. பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு இருப்பதால் வீரர்கள் மீது இயல்பாகவே அழுத்தமும் இருக்கும். இந்த முறை மற்ற வீரர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளால் கலந்தாலோசிப்பது நடக்காத காரியமாக இருக்கும். இந்த முறை ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற எனது பதக்க கனவை நிச்சயம் நெருங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார்.
ஊரடங்கும் பயிற்சியும்!
“ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடி எனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் டேபிள் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அந்த பயிற்சி எதற்காக என்ற எந்தவொரு இலக்கும் இல்லாமல் இருந்தது. எனது ஆட்டத்தில் டச் இருப்பதற்காக அந்த பயிற்சியை மேற்கொண்டேன்” எனவும் சொல்கிறார் அவர்.
என் விளையாட்டுக்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர் என அவர் சொல்கிறார். அவர்களுடன் எனது நேரத்தை நான் செலவிடவில்லை என்பது அவர்களுக்குள்ள வருத்தம் எனவும் தெரிவித்துள்ளார் ஷரத்.
தொழில்முறையாக பலர் டேபிள் டென்னிஸ் இந்தியாவில் விளையாட வேண்டும் என விரும்புவதாக சொல்கிறார் ஷரத். நிச்சயம் அது நடக்கும் என நம்புவோம்.