விளையாட்டு

"54 பந்துகளில் 89 ரன் "அருண் கார்த்திக் அதிரடி; சையத் முஷ்டக்அலி கோப்பை பைனலில் தமிழ்நாடு

"54 பந்துகளில் 89 ரன் "அருண் கார்த்திக் அதிரடி; சையத் முஷ்டக்அலி கோப்பை பைனலில் தமிழ்நாடு

jagadeesh

சையத் முஷ்டக் அலி கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது தமிழ்நாடு அணி.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அசோக் மெனாரியா 51, அர்ஜித் குப்தா 45 ரன்கள் குவித்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை சேர்த்தது. தமிழ்நாடு அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 4 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய பாபா அப்ரஜித் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதில் ஜெகதீசன் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் அருண் கார்த்திக் மிகச் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் சேர்த்தார்.

தமிழ்நாடு அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்று சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிச் சுற்றுக்கு சென்றது. இன்று பரோடா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி தமிழ்நாடு அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும்.