ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியடையவைக்கும் ஒரு டிரேடை அரங்கேற்றியது குஜராத் டைட்டன்ஸ். தங்கள் இரண்டு வருட சிறிய வரலாற்றில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ரன்னர் அப் பட்டம் பெற்றுக்கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். கேப்டன் என்பது மட்டுமல்லாமல், சொந்த ஊர் வீரர் என்பதால் அந்த அணியின் எதிர்காலத்துக்கும் ஹர்திக் ஒரு அடையாளமாக இருந்திருப்பார். 15 கோடி ரூபாய் வந்திருக்கிறது என்றாலும், அவர்கள் இந்த முடிவு எடுத்தது அதிர்ச்சிகரமானதாகவே இருக்கிறது. எதற்கு அவர்கள் இந்த டிரேடுக்கு ஒத்துக்கொண்டார்கள் என்பது வல்லபாய் படேலுக்குத்தான் வெளிச்சம்.
தங்கள் அணியின் பேக் அப் ஆக இருந்த வீரர்கள் பலரையும் ரிலீஸ் செய்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். ஷிவம் மாவி, அல்சாரி ஜோசப், கே.எஸ்.பரத் போன்ற வீரர்கள் அனைவரும் வெளியேறியிருக்கிறார்கள். அந்த அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்த யஷ் தயாலும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார். ரிங்கு ஐந்து பந்தில் ஐந்து சிக்ஸர்கள் அடித்த பிறகு அவரும் முன்பைப் போல் இல்லயே!
ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 8
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 17
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 8
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 2
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 38.15 கோடி ரூபாய்
1. சுப்மன் கில்
2. சாய் சுதர்ஷன்
3. கேன் வில்லியம்சன்*
4. விஜய் ஷங்கர்
5. டேவிட் மில்லர்*
6.
7. ராகுல் தெவேதியா
8. ரஷீத் கான்*
9.
10. முகமது ஷமி
11.
இம்பேக்ட் பிளேயர்: ரித்திமான் சாஹா
புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இந்த ஏலத்தை அதிகபட்ச தொகையோடு எதிர்கொள்ளப்போகிறது. மொத்தம் 38.15 கோடி ரூபாய் வைத்திருக்கும் அந்த அணி, நிச்சயம் பல சூப்பர் ஸ்டார்கள் வீரர்களை வாங்கலாம். ஆனால் யார் அவர்களுக்குத் தேவை?
மேலே பிளேயிங் லெவனைப் பார்த்தால் 3 இடங்கள் காலியாக இருக்கும். மற்ற சில அணிகளைப் போல் அங்கு அவர்களுக்கு ஆப்ஷன் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கு பல காம்பினேஷன்கள் கொடுக்கக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எந்த காம்பினேஷன் தேவையோ அவர்கள் அதை வைத்து அந்த இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். உதாரணமாக...
* ஃபினிஷராக மேத்யூ வேட் வேண்டுமெனில்: மேத்யூ வேட், சாய் கிஷோர், மோஹித் ஷர்மா
* நூர் அஹமதுவின் மாயச் சுழல் வேண்டுமெனில்: அபினவ் மனோஹர், நூர் அஹமது, மோஹித் ஷர்மா
* பவர்பிளேவில் அட்டாக் செய்ய ஜாஷ் லிட்டில் வேண்டுமெனில்: அபினவ் மனோஹர், ஜாஷ் லிட்டில், மோஹித் ஷர்மா
இப்படியான ஆப்ஷன்கள் இருக்கும் அந்த அணி, இன்னும் சில நல்ல வீரர்களை வாங்கி பலமாக முடியும். ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்கூர் இருவரும் அந்த அணிக்கு ஏற்ற வீரர்களாக இருப்பார்கள். ஹர்ஷல் வரும்பட்சத்தில் மோஹித்துக்கு பதில் அவர் டெத் பௌலராக இருப்பார். அது நல்லதொரு அப்கிரேடாக இருக்கும். அவர்கள் சாய் கிஷோரை அதிகம் பயன்படுத்த முடிவு செய்தால், ஒரு நட்சத்திர வெளிநாட்டு பௌலரை பெரும் தொகைக்கு வாங்கலாம். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அவர்கள் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள்.
அபினவ் மனோஹர் இடத்தை அப்கிரேட் செய்யவோ இல்லை அவருக்கு ஒரு போட்டி வேண்டும் என்றோ நிர்வாகம் நினைத்தால் ஷாரூக் கானை வாங்கலாம். அதன்மூலம் அவர்கள் அந்த வெளிநாட்டு ஸ்டார் பௌலரை டார்கெட் செய்யலாம்.
ஆக, ஸ்டார் இந்திய பௌலர்களான ஷர்துல்/ஹர்ஷல், ஸ்டார் வெளிநாட்டு பௌலர்களான ஸ்டார்க்/கம்மின்ஸ், ஸ்டார் இந்திய பேட்ஸ்மேனான ஷாரூக் என அனைத்து ஸ்டார் பிளேயர்களையுமே குஜராத் டார்கெட் செய்யலாம். அதற்கான பெரும் தொகை அவர்களிடத்தில் இருக்கிறது. இந்த 3 பிரிவில் இரண்டை நிச்சயம் அவர்களால் வாங்க முடியும்.
சரி, ஹர்திக்குக்கு மாற்று யார் என்று கேட்டால்... அது யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில், ஹர்திக் அந்த அணிக்கு நம்பர் 4ல் விளையாடினார். சில ஓவர்கள் பந்துவீசினார். அவர்கள் பலபோட்டிகளில் பௌலர்களையே பந்துவீச வைக்காமல் இருந்திருக்கிறார்கள். அதனால் ஹர்திக்கின் பௌலிங்கை அவர்கள் மிஸ் செய்யப்போவதில்லை. நம்பர் 4ல் சில போட்டிகளில் கலக்கிய விஜய் ஷங்கரை முழுமையாக நம்பி அவர்கள் களமிறக்கலாம். ஒருவேளை அதற்கு ஒரு பேக் அப் ஆப்ஷன் வாங்குவதும் நல்ல முடிவாக இருக்கும். மற்றபடி கேப்டன்சி இடத்தை ஓரளவு வில்லியம்சனின் அனுபவத்தை வைத்து ஈடு செய்ய முயற்சிப்பார்கள்.